உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்த கரோனா விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளன, அதன் போக்கு சரிதானா என சில கேள்விகளை முன்னாள் தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி அமைச்சர், ராகுல் காந்தி ஏன் பேசி நேரத்தைச் செலவிடுகிறார், அவர்களுடன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லலாமே என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்று கூறியவர் நிதியமைச்சர், அவர் ஒன்றும் தெருவில் இறங்கி மக்களிடம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் அல்ல. அவர் மக்களிடம் எவ்வித தொடர்பும் இல்லாதவர். இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நிதி கொடுப்பதைப் பற்றி நிதியமைச்சர் இதுவரை ஒரு வார்த்தை பேசி இருக்கிறார்களா? முதலாளித்துவ நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே மக்களுக்கு நிதியுதவி செய்கின்ற போது இந்தியா போன்று வளரும் நாட்டில் அதற்கான தேவை அதிகம் இருக்கின்ற போது மத்திய அரசு அதை ஏன் செய்ய மறுக்கின்றது.
மத்திய அரசு 20 லட்சம் கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் உதவிகளை அறிவித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் ஒரு மருத்துவர், அதை வைத்தே ஒரு உதாரணம் சொல்கிறேன். மருத்துவமனைக்கு உடல் முழுவதும் அடிப்பட்டு ஒருவர் வருகிறார், மற்றொருவர் லேசான காயத்தோடு சிகிச்சை பெற வருகிறார் என்றால் யாருக்கு முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும். இரத்தம் வழியும் நிலையில் இருப்பவருக்குத் தானே முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது ரத்தம் வழியும் நிலையில் இருப்பவர்கள் யார், புலம் பெயர் தொழிலாளர்கள் தானே? அவர்களுக்கு உதவ இந்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கின்றது. எந்தத் திட்டமும் இந்த அரசிடம் இல்லை என்பதே உண்மை. நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் எல்லாம் மக்களைச் சந்திக்காதவர்கள், குறைந்தது தேர்தலில் நின்று தோற்றாவது போயிருக்க வேண்டும். அப்படி கூட ஒரு வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை, என்றார்.