Skip to main content

'அமித்ஷாவை செங்கோட்டையன் சந்திக்கவே இல்லை; டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் '- புகழேந்தி காட்டம்

Published on 01/04/2025 | Edited on 01/04/2025
admk

'அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்ததாக வெளியாகும் தகவல்கள் தவறானவை' என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழேந்தி அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா பதிவிட்டிருந்தார். இதன் மூலம் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி என்பது உறுதியான நிலையில், டெல்லி தெருக்களில் அதிமுக அடமானம் வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. விற்பனை ஒப்பந்தம் மட்டுமே பாக்கி உள்ளது அதுவும் விரைவில் நடைபெறும்.

அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. இது போன்ற சூழலில் தற்பொழுது, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

செங்கோட்டையனை வைத்து அரசியல் நடைபெறுகிறது. யாரோ தவறான செய்திகளை அளிப்பதன் வாயிலாக தவறான செய்திகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. செங்கோட்டையன் டெல்லி சென்றதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நீண்ட நேரம் பேசியதாகவும் செய்திகள் வெளியாகும் நிலையில், இந்த நாட்டினுடைய உள்துறை அமைச்சரை எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் ரகசியமாக சந்திப்பதன் அவசியம் என்ன? அப்படி பெரிய ரகசியம் என்ன உள்ளது. செங்கோட்டையனிடம் ஒரு எம்எல்ஏ கூட  கிடையாது. அவ்வாறு சந்தித்து பேச வேண்டி இருந்தால் நான்கு எம்எல்ஏக்களை கொண்ட ஓபிஎஸ்ஐ அல்லவா அழைத்து சந்தித்திருக்க வேண்டும். இதுவரை செங்கோட்டையன் அவர்கள் தான் டெல்லி சென்றதாக எங்காவது தெரிவித்துள்ளாரா?

'Sengottaiyan never met Amit Shah; AIADMK is a pawn on the streets of Delhi' - Pugazhenthi Kattam

அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்த செங்கோட்டையன் இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியோடு பயணிக்கலாமா? இது நியாயமா? மனசாட்சி இருக்கிறதா? எனவே ஏன் ஊடகங்கள் தவறான செய்திகளை மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமர்ந்திருப்பது போல உள்ள பழைய புகைப்படங்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற எக்ஸ் பதிவிற்கு பின்னர் எந்த ஒரு அதிமுகவை சேர்ந்த தலைவர்களும் குறிப்பாக டெல்லி சென்று வந்த தலைவர்கள் கூட தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் என பொதுவெளியில் தெரிவிக்காதது ஏன்? ஏற்கனவே அதிமுக அவசர சிகிச்சைப் பிரிவில் பிரிவில் உள்ளது. தற்பொழுதுள்ள நிலையில் மேலும் மேலும் இதுபோன்ற தவறான தகவல்களால் கீறி கீறி புண்ணாக்கினால் கட்சி என்னவாகும்?

நடக்காத ஒன்றை தவறான செய்தியாக வெளியிடுவது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே செங்கோட்டையனை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் செயல்பாடுகளுக்கு அதிமுக இறையாக கூடாது. எப்பொழுதுமே தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகதான் ஆட்சி செய்யும் என்பதில் தொண்டர்களில் ஒருவனாக நான் உறுதியாக இருக்கிறேன். அடிப்படை அதிமுக உணர்வாளர் என்ற வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 2026ல் எம்ஜிஆர் அம்மா ஆட்சிதான் தமிழ்நாட்டில் அமையும். மேலும் பிஜேபி உடன்  கூட்டணி இல்லை இல்லை இல்லை என உறுதியாக கூறிவிட்டு இப்போது கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் பேசுவது தான் சரி எனக் கூறுவது ஏன்?

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை செங்கோட்டையன் நடந்தே போகலாம் எந்தவித எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்காது. யாருக்கும் அவர் எதிரி இல்லை. தேவையில்லாத பாதுகாப்பு அவசியமும் இல்லை. ஈரோடு மாவட்டம் மொத்தமாக காலியாகிவிட்டது. செங்கோட்டையன் பழனிசாமிக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவர் எடப்பாடி தலைமை  வேண்டாம் என்று சொன்னாரா? கிடையாது பின்னர் ஏன் தேவையில்லாமல் இப்படிப்பட்ட புரளி கிளப்பி விடப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்  பாரதிய ஜனதா கட்சியும் தீண்ட தகாதவைகளா? ஏன் ஒளிந்து திருட்டுத்தனமாக பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியால் தான் நான் தோற்றுப் போனேன். எனது வாழ்நாளில் தோல்வியே இல்லை என்று கூறிய ஜெயக்குமார் எங்கே? பிஜேபியால் தான் தோற்றுப் போனோம் என்று கூறிய சி.வி.சண்முகம் எங்கே? பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து வந்த கே.பி.முனுசாமி இப்போது ஏன் வாயடைத்து போயிருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு தேர்தலை சந்திக்க உங்களால் முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்ல உங்களுக்கு தகுதியும் இல்லை'' என காட்டமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்