கரிசல் மணம் கமழும் எழுத்தால் இலக்கிய உலகில் புகழ்பெற்றவர் கி.ராஜநாராயணன் ஆவார். கி.ரா. என அழைக்கப்படும் அவருடைய 97 ஆவது பிறந்தநாளை அவருடைய இலக்கிய நண்பர்கள் அண்மையில்தான் அவரோடு சேர்ந்து கொண்டாடினார். இந்த நிலையில் அவரது உற்ற துணையாக இருந்து வந்த 87 வயதுடைய அவர் மனைவி கணவதி அம்மையார் 25-ந் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இதனால் முதுமையில் துணை இழந்த பறவையாகிவிட்டார் கி.ரா. வழக்கமாக கி.ரா.வைப் பார்க்க அவர் வீடுதேடி யார் வந்தாலும், அவர்களை அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்பாளராகத் திகழ்ந்தவர் கணவதி அம்மையார். அதனால் அவரது மறைவுச் செய்தியை அறிந்த இலக்கிய அன்பர்கள் பெரும் துயரடைந்தனர். மிகவும் முதிர்வயதில் இருக்கும் கி.ரா.வுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவர்கள் கவலையடைந்தனர்.ஆனால் தன்னைத் தேற்றிக்கொண்ட கி.ரா. துக்கம் கேட்க வந்தவர்களிடம் இயல்பாகப் பேசி, நலம் விசாரித்துக்கொண்டிருந்தார் என்கிறார்கள். நேற்று( 26-ந் தேதி ) கணவதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் கருவடிக்குப்பம் மயானத்தில் நடந்தன.
இதுகுறித்து பிரபல கவிஞரும் இலக்கியவாதியுமான புதுவை தமிழ்நெஞ்சன், தன் முகநூலில் பதிவு செய்திருக்கும் உருக்கமான செய்தியை இங்கே பார்க்கலாம்.
நெகிழ்ச்சி தரும் நிகழ்வு!
-புதுவை தமிழ்நெஞ்சன்
கி.இரா இல்லத்தரசி இயற்கை எய்திய நிகழ்விற்கு மகள் தமிழ்மொழியோடு சுடுகாடுவரை சென்றுவந்தேன்.
வீட்டிற்குள் சென்ற போது கண்ணாடி பேழையில் நீள் துயிலில் கணவதி அம்மா அடுத்த அறையில் கி.இரா பேசிக்கொண்டு இருக்கிறார்.எப்போதும் போல... வந்தவர்களுடன்
"என்ன செய்யறீங்க" என்கிறார் கி.இரா இளவேனிலிடம். "அம்மாவ குளிப்பாட்டனும் அதற்காக மூன்று பேர் தண்ணீ எடுத்து வரனும்" என்கிறார் இளவேனில்.
"எரிக்கத்தானே போராங்க அதற்கு எதற்கு குளிப்பாட்டனும்" என்கிறார்.
இளவேனில் அமைதியாக இருக்கிறார்.
"சரி எதையாவது செய்யுங்க" என்று சொல்லிவிட்டு எல்லோரையும் பார்க்கிறார்
எங்கெங்கும் அமைதி. வெளியே வருகிறேன் "தமிழ்நெஞ்சன்"என்றழைக்கிறார் செயபிரகாசம் ஐயா "என் இறப்பு உயில் எழுதுவதற்கு சொன்னேனே நினைவிருக்கிறதா"
என்றார்.
"ஆமாம் ஐயா சட்டத்தில் நீங்கள் சொல்வது போல இல்லையின்னு வழக்கறிஞர் சொல்லிட்டார்"என்கிறேன்.
இங்கே நடந்து கொண்டிருப்பதை கவனித்தவர், "இப்போது அவரின்( கி.இரா) விருப்பத்திற்கு மாறாக நடக்கும் சடங்கைப்போல எனக்கும் நடந்திடக் கூடாதே என்பதற்காக முன்கூட்டியே எழுதி ஆவணப்படுத்தி விடவேண்டும் என நினைக்கிறேன்" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் செயபிரகாசம் ஐயா கொள்கையில் உறுதியும் நேர்மையும் உள்ளவரின் மனவுணர்வு எப்படி பட்டதாக இருக்கும் என்பதை அறிந்தவன் என்பதால் அவரை புரிந்து கொண்டேன்.
இயக்குநர் தங்கர் பச்சான் வருகிறார். அங்கே பேராசிரியர்கள் பஞ்சாங்கம், வெங்கட சுப்பராய நாயக்கர், நாகலிங்கம்,உரு.அசோகன், ஆசிரியை ஏமாவதி, பு.விசாகன், செந்தமிழினியன் கோ.செல்வம், சீனு.தமிழ்மணி,கு.அ.தமிழ்மொழி ஆகியோருடன் இறுதி ஊர்வலம் கருவடிக்குப்பம் சுடுகாடு நோக்கி புறப்பட்டது.