தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட், சூட் அணிந்து முற்றிலும் புதிய தோற்றத்தில் இருந்தார்.
லண்டனில் கோர்ட், சூட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அசத்தல் எனவும், கோட் சூட் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது என்றும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் செய்திகள் பரவின. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரும் கோட், சூட்டில் இருந்தார். எம்.சி.சம்பத் பேண்ட், சர்ட், டீசர்ட் அணிந்திருந்தார். பின்லாந்து சென்ற அமைச்சர் செங்கோட்டையன் பேண்ட், சர்ட் அணிந்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சென்னையில் இருந்து நேராக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கோட், சூட் அணிந்து புதிய தோற்றத்தில் இருப்பார் என்று அனைவரும் பேசி வந்தனர். ஆனால் ராஜேந்திரபாலாஜி எப்போதும் போல அதிமுக கரை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையை மடித்துவிட்டப்படி இருந்தார். அங்கு பங்கு பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேட்டி, சட்டையிலேயே இருந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து பார்த்த அவர், அப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். முதலில் வேட்டி சட்டையில் இருந்த ஆர்.பி.உதயகுமார் மற்ற அமைச்சர்கள்போல பின்னர் பேண்ட், சர்ட் அணிந்திருந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட், சூட் அணிந்திருந்த புகைப்படம் வைரலானது போல, ராஜேந்திர பாலாஜி அமெரிக்காவில் வேட்டி சட்டையில் வலம் வரும் காட்சியும் வைரலாகி வருகிறது. அவரிடம் நீங்க கோட், சூட் போடவில்லையா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் தமிழன்யா, வேட்டிதான் கட்டுவேன். நமக்கு அது ஒத்து வராது என்று கூறினாராம். ஒரு நாளாவது கோட், சூட் போடுங்க. அப்படி இல்லன்னா பேண்ட், சர்ட் போடுங்கன்னு உடன் சென்றிருப்பவர்கள் சொல்லி வருகிறார்களாம்.