Skip to main content

அன்று கலைஞர்; இன்று இ.பி.எஸ்.

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்ற உக்தியை தெரிந்துகொள்ள இஸ்ரேல் செல்லவிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.   நாம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தும் நீரை ஏழு ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தும் தொழில்முறையை அறியவும், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் தொழில்முறையை அறியவும் இந்தப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

d

 

முதல்வர் இப்போது செல்லவிருக்கும் இதே நோக்கங்களுக்காக பத்து ஆண்டுகளுக்கு முன்பே அப்போது முதல்வராக இருந்த கலைஞர் நீர்மேலாண்மையில் அக்கறை கொண்டு, இஸ்ரேலுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார்.  21 பேர் கொண்ட அக்குழுவில், அப்போது தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத்தலைவராகவும்,  பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கே.பி.ராமலிங்கமும் ஒருவர்.  


தற்போது, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவராகவும், திமுக விவசாய அணி செயலாளராகவும் இருக்கும் அவரிடம் அதுகுறித்து பேசியபோது,  ’’இஸ்ரேலில் எட்டு நாட்கள் இருந்து நீர் மேலாண்மையிலும், வேளாண்மையிலும் அவர்கள் காட்டிய உக்திகளையும், அந்த உக்திகளால் அவர்கள் அடைந்த வளர்ச்சியையும்  அறிக்கையாக கலைஞரிடம் கொடுத்தோம்.  

 

k

 

சொட்டு நீர் பாசனம்தான் இஸ்ரேலின் வேளாண்புரட்சிக்கு காரணமாக இருப்பதை அறிந்து,  இங்கேயும் சொட்டு நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் கொடுப்பது என்று முடிவெடுத்து,  முதற்கட்டமாக ஐம்பது சதவிகித மானியத்தை அறிவித்தார்.  இதன் பின்னர்தான் தமிழகத்தில் சொட்டுநீர் பாசனம் அதிகரிக்கத்துவங்கியது.   தமிழகத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்தே சொட்டு நீர் பாசனத்தில் அக்கறை காட்டினாலும் மகாராஷ்டிரா இன்று சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் வகிக்கிறது.  அதற்கு அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது.

 

கழிவுநீரை மறுசுழற்சி செய்து பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் கொண்டுவரவும்  கலைஞர் 2009ம் ஆண்டில் ஆலோசனை நடத்தினார்.  கழிவுநீரை சுத்திகரிப்பதா என்று அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.  மக்களிடையேயும் அதுகுறித்த புரிந்தறிதல் அப்போது இல்லாமல் இருந்தது.  மேலும், ஒரே ஒரு நன்னீர் ஏரியை மட்டும் கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு அது ஒன்றுதான் வழி.  அதனால் அந்த நீரை பணம் கொடுத்து வாங்கித்தான் வேளாண்மை செய்ய வேண்டிய நிலைமை இருந்ததால் இஸ்ரேல் அரசுக்கு அந்த அவசியம் இருந்தது.   இங்கே அப்படி ஒரு கட்டாயம் இல்லாமல் இருந்ததாலும், இத்திட்டத்திற்கு ஆகும் செலவும் அதிகம் என்று கணக்கிடப்பட்டதால் அத்திட்டத்தை   கலைஞர் செயல்படுத்தவில்லை.

 

i

 

 பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னர் மக்களிடையேயும் மனமாற்றம் வந்திருக்கிறது.  அத்திட்டம் கொண்டுவருவதற்கான  அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.   சென்னை மாநகரத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்தால் 10 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும்.  இதே போல் ஒவ்வொரு நகராட்சியிலும் செய்தால் சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு உதவும்.   இன்னும் சில தலைமுறைகளுக்கு பின்னர் இஸ்ரேலைப்போல இங்குள்ள வேளாண்மையும் முழுக்க முழுக்க கழிவுநீரின் மறுசுழற்சியைத்தான்  நம்பியிருக்க வேண்டிய நிலை வந்துவிடும் போலிருக்கிறது.

 

இது நிகழாமல் இருக்க  நீர் மேலாண்மையில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.  ஏதோ நானும் இஸ்ரேல் போகிறேன் என்று இல்லாமல், முறையான திட்டமிடலோடு செல்ல வேண்டும்.   விவசாய பிரதிநிதிகள், தொழில்நுட்ப அறிவியலாளர்கள், அதிகாரிகள் என்று மூன்று குழுவாக செல்ல வேண்டும்.  இந்த பயணத்தின் மூலம் இங்கு என்னென்ன நன்மைகளை செய்ய முடியும் என்று கருத்தரங்கங்கள் , நீண்ட ஆய்வுகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.   அப்படிச்செய்தால் தமிழக விவசாயிகளுக்கு இப்பயணம் பெரும் பயனுள்ளதாக அமையும்’’என்கிறார்.