இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
ராகுல் காந்திக்கு எதிரான குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும் ராகுல் காந்தி மிகவும் நிதானமாகவே பேசினார். என்ன காரணத்துக்காக அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்பட்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதற்கான சரியான காரணங்களை சூரத் நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் வழங்கவில்லை. குஜராத் உயர்நீதிமன்றமும் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியது துரதிர்ஷ்டவசமானது. அதை நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எளிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறது. இனி ராகுல் காந்தி எம்.பியாக தொடரலாம். அனைவரும் வரவேற்கக் கூடிய தீர்ப்பு இது. காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இந்த தீர்ப்பு வலு சேர்க்கும். இந்தியா என்கிற கூட்டணியின் பெயருக்கு எதிராக இவர்கள் வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று பல்வேறு விஷயங்களுக்கு இவர்கள் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு கம்பெனிகளின் பெயர்களிலும் இந்தியா என்பது இருக்கிறது.
அதிமுகவின் சீனியர் தலைவர்களை அண்ணாமலை கேலியாகப் பேசுகிறார். அண்ணாமலையால் அதிமுகவுடன் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ளவே முடியாது. அவருடைய நடைபயணமும் வெற்றிகரமாக முடிய வாய்ப்பில்லை. கூட்டப்பட்ட கூட்டம் தான் அவருக்கு வருகிறது. மக்களின் ஏற்பு அவருக்கு இல்லை. ஊடகங்களின் தாக்குதலுக்குப் பிறகு இப்போது தான் அவர் ஒரு நாளைக்கு நான்கு கிலோமீட்டர்கள் நடக்கிறார். அவர் பேசும் பேச்சுக்கள் நாராசமாக இருக்கின்றன. தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய படத்தை இவர்கள் நடைபயணத்தில் பயன்படுத்தியதாக ஒரு சர்ச் பாதிரியார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இப்போது ஹரியானாவிலும் இவர்கள் மதக்கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளைத் தாக்குகின்றனர். தேர்தல் முடியும் வரை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சனை இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட இந்தியா கூட்டணிக்கு தான் ஆதரவளிப்பார்கள். இது ஒரு சர்வாதிகார ஆட்சி என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நடித்துவிட்டு, இந்தி திணிப்பில் பாஜக மீண்டும் மீண்டும் இறங்குவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எப்போதும் தமிழ் மொழி மீது அதீத பற்று இருக்கும். இதற்காக மற்ற மொழிகளை நாம் வெறுக்கவில்லை. ஒரு மொழியை மட்டும் திணிப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லது.