தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர் ராவ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பாரத ராஷ்டிர சமிதி என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் ஒன்று இன்று (15-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி மக்களின் வாக்கு வங்கிக்காக நாடகம் ஆடுகிறது. மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க போவதாக சொல்கிறார்கள். ஆனால், நான் காங்கிரஸிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். பாபர் மசூதியை யாருடைய ஆட்சியில் இடித்தார்கள்?. அதை செய்தது யார்?. ஆனால், இன்று அவர்கள் நல்ல விஷயங்களை மட்டும் பேசுவதை போல் பேசுகிறார்கள். மதச்சார்பற்றவர்களாக அவர்கள் இருந்திருந்தால் என்றென்றும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.
இந்த மாநிலம் இரண்டாக பிரிந்த 2014ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை எந்தவித வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை. நான் உயிருடன் இருக்கும் வரை தெலங்கானா மதச்சார்பற்ற மாநிலமாகவே இருக்கும். இந்த மாநிலத்தில் வாழும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களை யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்காகவும், இந்துக்கள் இஸ்லாமியர்களுக்காகவும், வேலை செய்வார்கள். இருவரும் சகோதரர்கள் போல் இந்த மாநிலத்தை முன்னெடுத்து செல்வோம்” என்று கூறினார்.