காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, காஷ்மீர் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமர்நாத் யாத்திரை முடித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்து விட வேண்டாம். அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பி.டி.பி கட்சி தலைவரும், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான மெஹபூபா முப்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மெஹபூபா, மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தையும் , அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதுபோன்ற பீதியை நான் பார்த்ததில்லை. ஒரு பக்கம், நிலைமை சாதாரணமானது என்று ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகிறார். மறுபுறம், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. அமர்நாத் யாத்ரீகர்கள் & சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விடுவார்கள். ஆனால், ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் வசிக்கும் மக்கள் எங்கு செல்வார்கள் என்று நீங்கள் யோசிக்கவில்லையா?என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் அறிவிப்பு குறித்து மெஹபூபா முப்தி காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.