தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ இதுகுறித்து விளக்கினார். "பொதுவாக 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் உள்ள காண்ட் ராக்டர்கள் எடுப்பார்கள். இதனை முதல்வர் அலுவலகத்தில் உள்ள அவரது உதவியாளர் மணி, 500 கோடி ரூபாய் டர்ன் ஓவர் உள்ள காண்ட்ராக்டர்கள்தான் இந்த டெண்டரை எடுக்க முடியும் என மாற்றுகிறார். மொத்தம் 1,400 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட இந்த டெண்டரை இரண்டு காண்ட்ராக்டர்கள் மட்டுமே எடுக்கும் வகையில் டெண்டர் கண்டிஷன்களை மணி மாற்றுகிறார்.
இதை எதிர்த்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டுக்குச் செல்கிறார். பொதுவாக இதுபோன்ற டெண்டர் விஷயங்களில் கோர்ட் தலையிடாது. ஆனால் 50 கோடி ரூபாய் வரக்கூடிய தனித் தனிப் பணிகளை இணைத்து அதை 500 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்ட்ராக்டர்கள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் டெண்டர் விவரங்களை வெளியிட்டது அப்பட்டமாக தெரிந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தின் தலையீடு உள்ளது என்பதைப் பற்றி தெளிவான வாதங்களை நாங்கள் முன்வைத்தோம். இந்த டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து அரசிடம் விளக்கத்தை கேட்டுள்ளது. இது கரோனா காலம் 1,400 கோடி ரூபாயில் அவசரம் அவசரமாகச் செலவு செய்து சாலை போடுவதற்கான அவசியம் என்ன? அந்த 1,400 கோடி ரூபாயை எத்தனையோ வெண்டிலேட்டர்கள் வாங்கலாம். கரோனா தடுப்பு உடைகள் வாங்கலாம்'' என்கிறார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத்துறை அவசரப்படுவதற்குக் காரணம், அவரது மகன் மிதுனை களத்தில் இறக்கத்தான். அவருக்காகத்தான் தஞ்சாவூர் டெண்டர் ரெடியானது. அதில் கோர்ட் மூலம் அடிவாங்கிய எடப்பாடியின் மகன், அடுத்தபடியாக கோவையில் கால்பதித்தார். கோவை அவினாசி ரோட்டில் உள்ள கோல்டுவின் என்கிற இடத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை 14 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க ஒரு டெண்டர் கோரப்படவிருக்கிறது. 13.07.2020 அன்று வெளியிடப்படும் இந்த டெண்டரின் மதிப்பு 1,069 கோடி ரூபாய். மொத்தம் 10 கி.மீ. மேம்பாலமாக அமையப்போகும் இந்த சாலையில் ஒரு கி.மீ. கட்டுவதற்கு 106 கோடி ரூபாய் செல வாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டெண்டரை ஐதராபாத்தைச் சார்ந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் என்கிற கம்பெனிக்கு வழங்க வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் மற்ற ஒப்பந்ததாரர்கள் கலந்துகொள்ள வேண்டாம், இது முதல்வரின் மகன் மிதுன் மூலமாக ஐதராபாத் நகரில் பேசி முடிக்கப்பட்டது என இந்த டெண்டரை நிர்வாகம் செய்யும் மேற்பார்வை பொறியாளர் சாருமதி என்பவர் ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவித்துவிட்டதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி கோயம்புத்தூர் நகரத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, இந்தப் பாலத்திற்கு இன்னுமா டெண்டர் விடவில்லை என ஆச்சரியத்துடன் கேட்துடன், உப்பிலிபாளையம் பாலம் அவினாசி ரோடு, திருச்சி ரோடு ஆகியவற்றில் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.
இந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தைப் பற்றி ஐதராபாத்தை தலைநகராகக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் விசாரித்தபோது, இந்த நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ. ஊழல் வழக்குப் பதிவு செய்திருப்பதாக அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேம்பாலங்கள் கட்டிய ஒப்பந்தக்காரர்களைக் கேட்டபோது, இன்றைக்கு இருக்கும் கரோனா சூழ்நிலையால் கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது உண்மை. ஆனாலும், ஒரு கி.மீ. மேம்பாலம் கட்டுவதற்கு 106 கோடி ரூபாய் என்பது மிக மிக அதிகம். அதிகபட்சம் ஒரு கி.மீ. மேம்பாலம் கட்ட 50 கோடி என்ற அடிப்படையில் 10.கி.மீ.க்கு 500 கோடி ரூபாய் போதும். 500 கோடி ருபாய் வேலைக்கு 1069 கோடி ரூபாய் என மதிப்பிடுவது நிச்சயமாக பெருங்கொள்ளைதான் என்கிறார்கள்.
இந்த 500 கோடி ரூபாய், டெண்டர் விடப்படும் ஜூலை 13ஆம் தேதியே கைமாறிவிடும். அதிலும் இதுபோன்ற ஊழல் மலிந்த திட்டங்களை கையாள்வதில், கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக் சன்ஸ் என்கிற ஐதராபாத் நிறுவனம் திறமையானது. அதைக் கண்டறிந்துதான் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது என்கிறார்கள் விவரமறிந்தோர். டெண்டர் ஒப்பந்தம் தொடங்கி தேர்தல் களம் வரை மிதுனை நம்புகிறாராம் முதல்வர்.
இதுபற்றி கருத்தறிய கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திடமும், முதல்வர் மகன் மிதுனிடமும் தொடர்பு கொண்டோம். அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதுபோல மொத்தம் பத்தாயிரம் கோடி ருபாய்க்கு நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்ததாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தளவுகூட இல்லாமல் அரசியல் களத்தில் வாரிசுகள் அனுபவம் பெற முடியுமா?
படம் : ஸ்டாலின்