வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி.
“மிகப்பெரிய மோசடிக்காரராக மோடி இருக்கிறார். இதை ஒருகாலத்தில் மோடியோடு ஒன்றாக இருந்தவர்களே சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து வரும் மோடி, இவ்வளவு கொடுமைகள் நடந்தும் இன்றுவரை மணிபூருக்கு செல்லவில்லை. மனசாட்சியே இல்லாத ஒருவராக மோடி இருக்கிறார். ஹரியானா கலவரங்களுக்கு பாஜக தான் காரணம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதக் கலவரங்கள் இவர்களால் இன்னும் அதிகமாக நடத்தப்படும்.
அடுத்து ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கப் போகிறது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வருகின்றன. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்கிற பொய்யான கருத்துக் கணிப்புகளை பாஜக வெளியிட்டு வருகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஓட்டுப் போட்ட மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை நடத்தி வரும் பாதயாத்திரை, ஆளுநர் செய்து வரும் கூத்துக்கள் ஆகியவையே எங்களுக்கு வெற்றியை தேடித் தரும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினால் அதிமுகவுக்கு பயம் வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்ட போது, நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்கிற விதி இருந்தது. அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது. அந்த விதியைக் கொண்டுவர வைத்தது திமுக தான். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் இருக்கிறது. வர்ணாசிரமம் வேண்டும் என்று குதிக்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி. அப்படி வர்ணாசிரம தர்மப்படி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தை நடத்தினால் இவர்களுடைய ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்ன காரணத்தால், அவ்வளவு செலவு செய்து கட்டிய புதிய பாராளுமன்றத்தில் கூட்டத்தை நடத்தாமல் பழைய கட்டிடத்திலேயே நடத்தினர். அங்கும் உருப்படியாக எந்த பதிலையும் இவர்கள் வழங்கவில்லை. இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளுக்கு மக்கள் தான் சரியான பதிலைச் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.