இன்று மதுரை மத்திய சிறையில் கைதிகள் ஆவேசம் அடைந்து, தங்களைத் தாங்களே காயம் ஏற்படுத்திக்கொண்டதற்கான காரணங்கள் குறித்து சிறைத்துறை வட்டாரம் அளித்திருக்கும் தகவல் இதோ -
பொதுவாக சிறையினுள் அனுமதிக்கப்படும் சிறைவாசிகளை முழுமையாக சோதனை செய்தபிறகே சிறைக்குள் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. கடந்த சில நாட்களாக சிறையினுள் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தகவல் பெறப்பட்டது. விசாரணை மேற்கொண்டபோது, சிறைவாசிகள் ஆசனவாயிலின் மூலமாக கஞ்சாவை சிறைக்குள் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையினால், சிறைக்குள் கஞ்சா கடத்த இயலாத சிறைவாசிகள், தங்களை சோதனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சக சிறைவாசிகளையும் தூண்டிவிட்டு, இன்று மதியம் 3-30 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தொகுதியின் கட்டிடத்தின் மேற்கூரை மீது ஏறி, கட்டிடத்தின் கைப்பிடிசுவர் செங்கற்களை உடைத்து, சிறை சுற்றுச்சுவருக்கு வெளியிலும் சிறைக்குள்ளும் எறிந்தனர். மேலும், மேலே ஏறிய சிறைவாசிகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இது தெரிந்ததும் சிறைக்கண்காணிப்பாளர் சிறைக்கு வந்து, சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கியதும், சிறைவாசிகள் அமைதியடைந்து கீழே இறங்கினர். காயப்படுத்திக்கொண்ட சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் குறித்து, சரக சிறைத்துறை துணைத்தலைவர் நேரில் வந்து அனைத்து சிறைவாசிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இரவு மணி 11-30 கடந்தும், காக்கிகள் - கைதிகள் மோதல் குறித்து சட்ட உதவி மேஜிஸ்ட்ரேட், மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை நடத்தி வருகிறார். சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, எஸ்.பி. ஊர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய சிறையைவிட்டு இன்னும் வெளிவரவில்லை. சிறைக்குள் இருந்த சிசிடிவி கேமரா ஒன்று உடைக்கப்பட்டிருப்பது விசாரணையின்போது தெரிய வந்திருக்கிறது.
-அரத்யா