கடந்த அக். 28-30 நக்கீரன் இதழில் ஸ்டாலின் மீது பாயப்போகும் வழக்குகளின் லிஸ்ட் என்கிற செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் முக்கியமாக இடம்பெற்றது கொளத்தூர் தொகுதியில மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு. கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைக்கு வராமல் இருந்த வழக்கை தூசி தட்டி எடுத்து வருகிற நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் இது இறுதிக்கட்ட விசாரணை. வழக்கறிஞர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் நடத்துவார்கள். விரைவில் தீர்ப்பு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பை பெற்று அதன் முலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை போட்டியிடாமல் செய்ய மத்திய அரசு மும்முரமாக வேலை பார்த்து வருகிறது.
கேரளாவில் சிபிஐயும், போதைப்பொருள் தடுப்புத் துறையும் இணைந்து மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனை கைது செய்திருக்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் திமுகவை முடக்க ஸ்டாலினுக்கு எதிராக இந்த தேர்தல் வழக்கை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டோம். "ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதி வெற்றிக்கு எதிராக சைதை துரைசாமி தொடுத்த வழக்கைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வரும். அந்த வழக்கில் சைதை துரைசாமி முன் வைத்த வாதங்கள் பொய் என நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி வேணுகோபால் என்பவர் முழுமையாக ஆராய்ந்து சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளார். அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இறுதி வாதத்திற்காக நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.
இறுதி வாதம் என்பது நேரடியாக செய்ய வேண்டிய ஒன்று. இப்போது காணொளிக் காட்சிமூலமாக வாதம் நடப்பதால் அந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை. ஒருவேளை சைதை துரைசாமி வெற்றி பெற்றாலும்கூட, அதை வைத்து மு.க.ஸ்டாலின் தேர்தல் நிற்க தடை விதிக்கலாம் என்பதே அர்த்தமற்ற வாதம். அப்படி தடை விதிப்பதற்கு எதிராக ஏராளமான தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருக்கிறது. திமுகவை முடக்க மத்திய அரசு சிபிஐயை ஏவுமானால் அதை சட்ட ரீதியாக முறியடிக்க திமுக தயாராகவே உள்ளது'' என்கிறார் உறுதியான குரலில்.