Skip to main content

திமுக இளைஞரணியும், மாணவரணியும் இனியும் இணைந்து செயல்படுமா?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

திமுக இளைஞரணியின் உடனடி போராட்ட நடவடிக்கைகள் திமுகவினரை உற்சாகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.


அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்டநகலைக் கிழித்து கைதானார். மாலையில் விடுவிக்கப்பட்டாலும், இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு சிறைப்பட்ட முதல் அனுபவத்தை பெற்றார்

dmk party youngsters team and students team has merge working

பொதுவாக ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞரணிக் கிளைகளை தொடங்கினார். ஆனால், 40 வயது வரை மட்டுமே இளைஞரணிப் பொறுப்புக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், திமுக பொருளாளர் ஆன பிறகும் ஸ்டாலின் இளைஞரணிப் பொறுப்பை யாருக்கும் கொடுக்கவில்லை.


ஏனெனில், திமுகவின் அமைப்புக்கு நிகராக இளைஞரணி பலம் பொருந்தியதாக இருந்தது. இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகுதான் திமுகவில் மாணவரணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொதுவாக, மாணவர்களையும் படித்த இளைஞர்களையும் அடித்தளமாகக் கொண்டே திமுக வளர்ந்தது. கல்லூரிகளில் இருந்தே திமுகவின் பொறுப்பாளர்களில் பலர் உருவானார்கள்.


மாணவர் அணி என்பதை நாற்றங்காலாகவும், இளைஞரணி என்பதை விளைநிலமாகவும் கருதி திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் மாணவர்களை பாதிக்கிற எந்த விஷயத்திற்கும் உடனடியாக களம்கண்டதில்லை.

dmk party youngsters team and students team has merge working

இதற்கு காரணம் இளைஞரணிதான். இளைஞரணிப் பொறுப்பாளராக ஸ்டாலின் இருந்தவரை அவருடைய வயதுக்கு நிகரான இள.புகழேந்தியே மணவர் அணி செயலாளராக நீடித்தார். ஒரு காலத்தில் கல்லூரிகளில் திமுக மாணவர் அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாணவர் பேரவைத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் பேரவைத் தேர்தல்களை அதிமுக அரசு தடை செய்தது.


இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ அமைப்பு மாணவர்களிடம் ஊடுருவத் தொடங்கியது. பாஜகவின் ஏபிவிபியும் கணிசமான மாணவர்களை ஈர்க்கத் தொடங்கியது. எம்ஜியாருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் மாணவர் பேரவைத் தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. ஆனால், அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை, மாணவர் அணி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


என்னதான் இருந்தாலும், திமுக மாணவர் அமைப்பு செயல்படாத வெறும் பெயருக்கான அமைப்பாகவே தொடர்ந்தது. இந்நிலையில்தான் இளைஞரணிக்கு ஸ்டாலின் தனது மகனை உதயநிதியை செயலாளராக நியமித்தார். உடனே அதுவரை இல்லாத முக்கயத்துவம் இளைஞரணிக்கு கிடைத்தது. கலைஞரின் மகன் என்பதால் எப்படி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணிக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைத்ததோ, அதே அளவுக்கு உதயநிதி தலைமையிலான இளைஞரணிக்கும் புகழ் வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது.

dmk party youngsters team and students team has merge working

உதயநிதி செயலாளர் ஆனதாலோ என்னவோ, திமுகவின் மூத்த தலைவர் மறைந்த சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசன் மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதுடன், ஐஐடி மாணவர் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் உடனுக்குடன் கண்டன அறிக்கைகள் வெளிவந்தன. சில போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், இளைஞரணி அளவுக்கு எழுச்சி இல்லை என்ற குறை இருந்தது.


இந்நிலையில்தான் படிக்கிற காலத்திலிருந்தும் படித்து முடித்த பின்னரும் அரசு வேலை வாய்ப்புக்கு இருந்த ஒரு வாய்ப்பான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக மாணவர் அணியும், இளைஞர் அணியும் இணைந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றன. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.


திமுகவில் இளைஞர்கள் மாணவர்கள் என்பவர்கள், கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈர்த்துவிடுகிறார்கள். மாணவப் பருவத்திலிருந்தே தமிழ்மொழிப் பற்று, மாநிலப் பற்று, தமிழகத்தின் தனித்தன்மை ஆகியவற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய திமுக இனியேனும் மாணவர்களாக இருக்கும்போதே இளைஞர்களை கவரும் வகையில் மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று இளைய தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்