தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று முடிந்தது.
இந்த மறைமுக தேர்தலில், ஊராட்சி ஒன்றிய துணை தலைவருக்கான 314 பதவி இடங்களில் திமுக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 94,இடங்களிலும், பாமக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தேமுதிக 7 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
ஊராட்சி ஒன்றிய துணை தலைவருக்கான தேர்தலில் சுயேச்சைகள் 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். போதிய உறுப்பினர்கள் வராததால் 41 துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல் 27 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல இடங்களில் மறைமுக தேர்தல் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
போதிய உறுப்பினர்கள் வராததால் 13 இடங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலைவருக்கான பதவிகளில் அதிமுக 13 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும்,பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் பாமக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், தேமுதிக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றியம் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக 140 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, திமுக 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.