நான்கு நாட்களாக அமலில் இருந்த முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், சேலத்தில் புதன்கிழமை காலையில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மருந்துக்குக்கூட சமூக விலகல் விதிகள் பின்பற்றப்படவில்லை.
கரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக சமூக விலகல் விதியைக் கடைப்பிடிக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் ஏப். 25, 26 தேதிகளிலும், மாநகராட்சி பகுதிகளில் 25- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி நான்கு நாள்களாக காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பேக்கரி கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன. உணவகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
நான்கு நாள் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்து, புதன்கிழமை (ஏப். 29) அன்று முழு ஊரடங்குக்கு முந்தைய நிலை அமலுக்கு வந்தது. இதையொட்டி காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் கடைகள் போட அனுமதிக்கப்பட்டனர். உழவர் சந்தைகள் இயங்கின.
மளிகைக் கடைகளும், பேக்கரிகளும் நிபந்தனைகளுடன் இயங்கின. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக சேலம் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குக் கடைகளில் குவிந்தனர்.
பலர் முகக்கவசம் அணிந்து இருந்தாலும், ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதியை மறந்து போனார்கள்.
சேலம் மாநகர பகுதியில் அஸ்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதி மக்கள் நெரிசலில் திக்குமுக்காடியது.
பெரும்பாலான மளிகைக்கடைகளில் கூட்டம் திமிறிக்கொண்டு இருந்தது. சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருள்களை வாங்க வேண்டும் என்ற சுய ஒழுங்கும், சிந்தனையும் இல்லாமல் கடைகளில் குவிந்தனர்.
இதேபோல் மக்கள் சமூக விலகலை மறந்து பொதுவெளியில் நடமாடினால், கரோனா ஒழிப்பில் கொஞ்சமும் முன்னேற்றம் இருக்காது என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். ஆகையால் பொதுமக்கள் சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிந்திருத்தல், கூட்டம் கூடாமல் தனித்திருத்தல் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
கடந்த 24- ஆம் தேதியன்று, சென்னையில் மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். கிட்டத்தட்ட அதேபோன்ற காட்சிதான் சேலத்திலும் புதன்கிழமையன்று காணப்பட்டது.