சமீபத்தில், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அதே மேடையில், 'வாரிசு அரசியல்', 'காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த போது கொண்டு வந்த சட்டங்கள் என்ன?' என்று பேசி திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக, தி.மு.க.வின் மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார். நமது கேள்விக்கு அவரின் பதில்கள் பின்வருமாறு,
எங்களைப் பார்த்து ஊழல் செய்வதாகவும், அநீதி இழைப்பதாகவும் தி.மு.க பேசுவதை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. 2ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது தி.மு.க என்பதை மறந்துவிடக் கூடாது. அக்கட்சிக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்று சென்னை வந்த அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளாரே?
2ஜி ஊழல் நடந்ததுனு சொன்ன ஆடிட் ஜென்ரல் வினோத் ராய், தனது பதவி காலம் முடிஞ்சதும், நேரடியா பிஜேபில வந்து சேர்ந்தாரு. "ஊழல் நடந்ததா சொல்லும் போது மக்களுக்கு அதிர்ச்சி வர்ற மாதிரியான தொகையா இருக்கணும்னு, அந்த 'ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி' தொகை வர்ற மாதிரி செய்தோம்னு" ஒளிவு மறைவே இல்லாம பேட்டி குடுக்குறாரு. அதாவது அதை ஒரு ஊழலாகவும், அதிர்ச்சி தர்ற தொகையாகவும் வேணும்னே நாங்கதான் செய்தோம்னு ஒப்புதல் வாக்கு மூலமே குடுக்குறாரு வினோத் ராய். அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு கெட்ட பெயரை உருவாக்கி, அதன் மூலமாக, தாங்கள் ஆட்சிக்கு வர பி.ஜே.பி போட்ட திட்டத்தை அரசு அதிகாரியாக இருந்து செயல்படுத்தியவர் வினோத் ராய். எனவே 2ஜி ஊழல் என்பது பி.ஜே.பி ஏற்படுத்திய செய்தி ஊழல்.
ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் குடும்பக் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுகின்றனர். தமிழகத்திலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனக் கடுமையாகத் தாக்கியுள்ளாரே அமித்ஷா?
அதைச் சொல்லும் போது அவரைப் பார்த்து விழுந்து வணங்கி எழுந்தார் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரன். அப்படிப் பேசியதற்காக தனது அப்பாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தார் அமித்ஷா மகன் ஜெய்ஷா
திமுகவினரிடமும் அவர்களுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சியினரிடமும், கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தனர் எனக் கேளுங்கள். எங்களது திட்டங்களைப் பற்றி நாங்கள் பட்டியல் தரத் தயார். அவர்களின் திட்டங்களில் ஒன்றாவது சொல்ல முடியுமா? என அமித்ஷா சவால் விட்டுள்ளாரே...
தி.மு.க அங்கம்வகித்த முந்தைய UPA ஆட்சியில், தமிழகத்தில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல் :- (2004 - 14)
* சென்னைக்கு அருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (National Marine University)
* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)
* கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.
* திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)
* ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.
* சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)
* திருச்சியில் தேசிய சட்டக் கல்லூரி (National Law School)
* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
மேலும்,
* கிண்டி கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில் உருவாகின...
* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" மருத்துவமனையாக மேம்பாடு.
* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.
* 1,650 கோடி ரூபாய்ச் செலவில், சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
* 2,427 கோடி ரூபாய்ச் செலவில், சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
* 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
* சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.
* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
* சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.
* 1,553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருக்காலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருக்காலை உருவாக்கம்.
* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு..
* நெசவாளர் சமுதாயத்தினர் பெரும் பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.
* இந்தியா முழுவதும் மாணவர்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்...
நீட் கொண்டு வந்தது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது போன்றவற்றைத் தவிர இதுவரை தமிழ்நாட்டுக்கு பி.ஜே.பி என்ன செய்திருக்குனு, அமித்ஷாவாலோ அல்லது தமிழகத்தை ஆளுபவர்களாலோ ஒரே ஒரு திட்டத்தைச் சொல்ல முடியுமா!?
பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் கூட்டணி குறித்து அறிவிப்பது, கடந்த காலத்தில் எதிர்க்கட்சி என்ன செய்தது என்பன போன்ற விசயங்களைப் பேசியது குறித்து எப்படிப் பார்க்கிறீர்கள்? இ.பி.எஸ் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன?
பொதுவாகக் கட்சி வேறு, ஆட்சி வேறு. அரசு விழாக்கள் என்பது அரசின் நிதியில் பொது மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் விழா. அங்கு போயி தங்கள் கட்சி பற்றிய அறிவிப்புகளை செய்திகளைத் தெரிவிப்பது அறம் அல்ல. ஆனால், அறம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.
அ.தி.மு.க அரசின் சாதனைகள், தமிழக மக்கள் பார்க்கின்றனர். பாராட்டுகின்றனர். ஜெயலலிதா அரசுக்குத் தினமும் மக்கள் செல்வாக்குக் கூடுகிறதே என எதிர்க்கட்சியினர் மனம் பதைக்கின்றனர் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் பேசியிருக்கிறாரே?
அண்ணன் ஓ.பி.எஸ் கட்சிக்காரர்களை மட்டுமே பார்க்குறதால, எதார்த்தம் தெரியாம பேசுறாரு. தேர்தல் வரும் போது எப்படியும், தொகுதி பக்கம் போயி மக்களையும் பார்ப்பாருல்ல.. அப்ப மக்கள் அவருக்குக் குடுக்குற வரவேற்புல "எல்லாம்" அவருக்குத் தெரிய வரும்...