திமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனிடம் அண்ணாமலையின் பாதயாத்திரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில் சிறு தொகுப்பு பின்வருமாறு....
“‘என் மண்’ என்று அண்ணாமலை தமிழ்நாட்டைச் சொல்கிறாரா, கர்நாடகாவைச் சொல்கிறாரா? என்னுடைய மண் கன்னட மண் என்று சில வருடங்களுக்கு முன்பு அவர் கர்நாடகாவில் பேசினார். நான் ஒரு கன்னடிகன் என்று பெருமையாக அவர் சொன்னார். அண்ணாமலை செல்வது பாதயாத்திரை அல்ல, படுக்கை யாத்திரை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சென்ற யாத்திரை தான் மக்களுக்கான உண்மையான யாத்திரை. அந்த யாத்திரையை தமிழ்நாடு முதல்வர் தளபதி தொடங்கி வைத்தார்.
கேரவன் இருந்தாலும் ராகுல் காந்தி அதை அதிகம் பயன்படுத்தவில்லை. தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் அதிமுக ஆட்சியில் 'நமக்கு நாமே' என்கிற பயணத்தை மேற்கொண்டார். தெருத்தெருவாக நடந்தே சென்று அவர் மக்களைச் சந்தித்தார். யாத்திரைக்கு அண்ணாமலை பயன்படுத்தும் சொகுசு வாகனத்தை பாஜகவே படமாக வெளியிடுகிறது. எதையாவது செய்து கூட்டத்தை வரவழைக்க வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. அது ஒரு சொகுசு யாத்திரை. மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக அண்ணாமலை திகழ்கிறார். அவரை நாங்கள் சீரியசாகவே பார்ப்பதில்லை.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமித்ஷா சொல்கிறார். ஜெய்ஷா அவருடைய மகன் தானே? அவர் தானே கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்? அமைச்சரவையில் இருப்பதை விட பெரிய விஷயம் இது. கர்நாடகாவில் பொம்மையை வைத்து இவர்கள் குடும்ப அரசியல் செய்யவில்லையா? இந்தியா முழுக்க பாஜக குடும்ப அரசியல் செய்கிறது. பாஜக எந்த வகையில் இந்தியாவுக்கு நல்லது செய்திருக்கிறது? திராவிட மண்ணாக இருக்கும் தமிழ்நாட்டை ஆரிய மண்ணாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம்.
செந்தில் பாலாஜி மீது இவர்கள் வழக்கு போட்டு கைது செய்தார்கள். திமுக ஆட்சியில் ஏதாவது தவறு செய்தார் என்று அவர்களால் வழக்கு போட முடிந்ததா? அதிமுக ஆட்சியில் நடந்த விஷயத்துக்கு தான் வழக்கு போட முடிகிறது. அனைத்து வழக்குகளையும் சந்திக்க நாங்கள் தயார். ஊழல் குறித்து பேசுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை. குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது செய்த போலி என்கவுன்டருக்காக கைது செய்யப்பட்டவர் அவர். அப்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரா? இல்லை. குஜராத் கலவரத்திற்குப் பிறகும் மோடி முதலமைச்சராகவே தொடர்ந்தார்.
செந்தில் பாலாஜி மட்டும் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? முதலமைச்சர் தளபதியைப் பார்த்து பாஜகவுக்கு பயம். அமித்ஷா வந்து தொடங்கி வைத்ததால் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் ஏ.சி.சண்முகம். மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். வேலூரில் அவரால் ஜெயிக்க முடியுமா? அவருக்கு நான் சவால் விடுகிறேன். திமுக வேட்பாளர் அவரை நிச்சயம் தோற்கடிப்பார். பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது”.