Skip to main content

திமுகவை விலக்கிய விஜயகாந்த் வீராப்பு! -பின்னணியை விவரிக்கும் தேமுதிக தரப்பு! 

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

ஒரு வழியாக தமிழகத் தேர்தல் களத்தில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துவிட்டது. இந்த முறையும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கதவைச் சாத்திவிட்டது தேமுதிக.  
 

vijayakanth



எப்படியாவது, கூட்டணிக்குள் தேமுதிகவை இழுத்துப்போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்தார் ஸ்டாலின். கனிமொழி, திருநாவுக்கரசர் ஆகியோரைத் தூது அனுப்பியும் மசியவில்லை விஜயகாந்த் தரப்பு. தாமே களத்தில் இறங்குவோம் என்று ஸ்டாலினே போனார். 
 

தேமுதிக தரப்பு கேட்ட சீட் எண்ணிக்கை, விட்டமின் 'ப’ போன்ற விவகாரங்கள் திமுகவை யோசிக்க வைத்தது. எப்படியும் வருவார் என்று காத்திருந்தும் பலன் இல்லாததால், மற்ற கட்சிகளுக்குத் தொகுதியை ஒதுக்கிவிட்டு,  பிரச்சாரத்தை துவங்கி விட்டார் ஸ்டாலின். இன்று (06-02-2019) விருதுநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். 
 

“திமுகவிற்கு பிடி கொடுக்காததற்குக் காரணம் சீட் மட்டுமல்ல.  பழைய பகையை மனதில் வைத்துத்தான்..” என்கிறார்கள் தேமுதிக வட்டாரத்தில்.  2014 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தபோது,  அதனைச் சீர்குலைக்கும் விதமாக  “தே.மு.தி.க.வுடன் கூட்டணி தேவையில்லை” என்று மு.க.அழகிரி கூறியது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாகத்தான், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி.
 

தே.மு.தி.க.வுடனான கூட்டணிக்காகத்தான் மகன் என்றும் பாராமல்,  அழகிரியைக் கட்சியிலிருந்தே நீக்கி, விஜயகாந்தின் அனுதாப பார்வையை கருணாநிதி எதிர்நோக்குகிறார் என அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்த அளவுக்கு தி.மு.க. வளைந்து கொடுத்தபோதிலும், "இதெல்லாம் நாடகம்... இந்த நாடகத்திற்கு தே.மு.தி.க அடிபணியாது.." என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.  சொன்னது போலவே அந்தத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக.

 

vijayakanth


அதேபோல், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும்,  ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் கருணாநிதி. ஆனால், அதற்கு விஜயகாந்த் உடன்படாத காரணத்தால்,  கட்சியை உடைக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது, விஜயகாந்துடன் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோரைத் தூண்டிவிட, ‘மக்கள் தேமுதிக’ உருவானது. அந்தக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது திமுக. பின்னர், அந்தத் தேர்தலுடன் மக்கள் தேமுதிக காணாமல் போனது தனிக்கதை.
 

"இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், கடைசிவரை திமுகவிற்கு பிடி கொடுக்காமல் கெத்து காட்டிவிட்டார் எங்கள் கேப்டன்.." என்கிறார்கள் தேமுதிகவினர்.
 

கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் தங்கள் பக்கம்தான் தேமுதிக வரும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு அழுத்தமாக இருக்கிறது.  விஜயகாந்த் என்ற பழம் நமக்குத்தான் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினரும் உள்ளனர்.   “எல்லாம் பேசி முடித்தாகிவிட்டது. அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.” என்கிறார் அமைச்சர் ஒருவர். ஆம். தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்பது இன்று தெரிந்துவிடும்.