பிப்ரவரி 14 அன்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படை வீரர்களின் வாகன அணி வகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தது தேசத்தை மட்டுமல்ல உலக நாட்டையே உலுக்கி விட்டது.
வீரமரணம் எய்தியவர்களில் தமிழ் நாட்டின் தூத்துக்குடி, சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற வீரரும் ஒருவர். அவரது மரணம் அவரது கிராமத்தையே அதிரவைத்து விட்டது. சுற்றுப்பட்டுப் பகுதியே துக்கத்திலிருக்கிறது.
சவலாப்பேரி கிராமத்தின் சிறுவிவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (28) தந்தை கணபதி, தாய் மருதாத்தாள். இவர்களின் நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டி சுப்பிரமணியம். இரண்டு சகோதரிகள் மணமாகிச் சென்று விட சகோதரன் துபாயில் வேலை பார்க்கிறார். ஆரம்பப் படிப்பை வெங்கடாசலபுரத்திலிருக்கும் தன் தாத்தா வீட்டிலிருந்து படித்தவர் பின் 10ம் வகுப்பு வரை அருகிலுள்ள வில்லிசேரி கிராமத்தில் படித்தார். பின்பு கோவில்பட்டியிலுள்ள கம்மவார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும், அதன் பின் ஐ.டி.ஐ.யும் படித்தார். பின் கயத்தார் டோல் கேட்டில் பணிபுரிந்தார். அதற்கு பின்னர் நடந்த தேர்வில் சி.ஆர்.பி.எப். படைக்குத் தேர்வானவர் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் 2 வருடம் டிரைரெய்னிங் முடித்து, காஷ்மீர் பணிக்கு அனுப்பப்பட்டார். மூன்று வருடங்கள் அங்கேயே பணியில் இருந்தார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவரை பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் பொங்கல் திருநாள் முன்னிட்டு, ஒரு மாதம் விடுப்பில் வந்த சுப்பிரமணியம், விடுப்பு முடிந்து கடந்த 10ம் தேதிதான் காஷ்மீர் திரும்பினார். நேற்று காலை (14ம் தேதி) தன் வீட்டுக்குப் போன் செய்து, அம்மா நான் வந்து விட்டேன் டூட்டியில் ஜாயிண்ட் பண்ணிட்டேன்னு சொல்ல. அந்த தாயின் மனம் குளிர்ந்திருக்கிறது. ஆனால் காலத்தின் கோலம், அந்த மகனை தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல் பறித்தக் கொண்டுபோயிருக்கிறது. கலங்கித் தவிக்கிறது சவலாப்பேரி.