தமிழர்கள் தங்கள் பழம்பெருமை சார்ந்த செய்திகளை பனை ஓலைகளில் எழுதி வைத்து பாதுகாத்துள்ளனர். அவ்வாறு எழுதி பாதுகாத்து வைத்த சுவடிகளே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நீதி நூற்கள், பக்தி, இலக்கிய நூல்களாக நம் கைகளில் கிடைக்கின்றன. மேலும் சித்த மருத்துவம், கணிதம், சோதிடம், வானியல், நிகண்டு, மந்திரம், ஜாலம், ஓகம், ஆவணம் ஆகிய சுவடிகளும் நூல் வடிவம் பெற்றுள்ளன. இவ்வாறு நூல் வடிவம் பெற்றுள்ள சுவடிகள் மூலம் தமிழரின் தொன்மையான வரலாறு, பண்பாடு, நாகரிகம், வானியல் அறிவு, மருத்துவத்திறன், சோதிட கணிப்பு, உடலியல் காப்பு, போர் முறை, மொழி ஆளுமை உள்ளிட்ட பல பழம்பெருமைகளை அறிந்து வியக்க முடிகிறது.
தமிழகத்தில் நிறுவனம், ஆய்வு மையம், கல்லூரி, பல்கலைக்கழகம், நூலகம், அரசு பாதுகாப்பகம், ஆவண காப்பகம், தனிநபர் பாதுகாப்பகம் ஆகிய இடங்களில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேல் சுவடிகள் உள்ளன. கேரளா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கல்கத்தா உள்ளிட்ட பல வெளி இடங்களிலும் இலட்சக்கணக்கான தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அயல்நாடுகளிலும் லட்சக்கணக்கான தமிழ்ச் சுவடிகள் உள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் திரட்டப்படாத நிலையிலும் சில லட்சம் சுவடிகள் உள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் கள ஆய்வு செய்து சுவடிகளைத் திரட்டிச் சேகரிப்பது முற்றிலும் அருகிப்போய் உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து கள ஆய்வின் மூலம் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டிச் சேகரித்து பாதுகாத்தலோடு நூலாக்கம் செய்யும் பணியையும் செய்து வருபவர் சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஆவார். இவர் இதுவரை 62 தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனிப்பட்ட முறையில் 100 க்கும் அதிகமான சுவடிகளைத் திரட்டி சேகரித்துள்ளார். அவர் தற்போது கள ஆய்வில் 16 அரிய தமிழ்ச் சுவடிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
அது குறித்து அவர் கூறியதாவது; தமிழர்கள் உலகின் தலை சிறந்த அறிவாளிகளாக இருந்துள்ளனர். அவர்கள் காலந்தோறும் தங்கள் மரபுகளை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து பாதுகாத்தனர். தமிழர்களின் அறிவு மரபு அதிக அளவில் சுவடி நிலையில் கிடைக்கின்றன. இன்றைய தலைமுறையினருக்கு சுவடிகளைப் படித்து அறியத் தெரியாத நிலை உள்ளதால் சுவடிகள் தீண்டுவாரற்று அழிந்து வருகின்றன. சுவடிகள் நன்கு படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 10க்கும் குறைவானவர்களே உள்ளனர்.
இதனால் இலக்கியம், மருத்துவம், ஆவணம் உள்ளிட்ட பொருண்மையிலான பல இலட்சம் சுவடிகள் அதன் பெருமைகள் தெரியாமலே அழிந்து வருகின்றன. மேலும் திரட்டப் படாத சுவடிகளும் மக்களின் வீடுகளின் பரண்களில் கிடந்து அழிந்து வருகின்றன. எனவே இன்றைய சூழலில் சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பயணித்து சுவடிகளைச் சேகரித்து வருகிறேன். அதே போல நெல்லை மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வுப் பணியின் போது, விருதுநகரில் வசிக்கும் நளினி ரமேஷின் தகவலின்படி தங்கள் வீட்டில் சில சுவடிகள் உள்ளன. தாங்கள் நேரில் வந்தால் தருகிறோம்” என்றார்.
அந்த தகவலின் பேரில் விருதுநகர் சென்று அவரின் இல்லத்தில் சுவடிகளைப் பார்வையிட்டேன் மொத்தம் 16 சுவடிகள் இருந்தன. இச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்து வந்தவர் காலஞ்சென்ற எஸ்.எஸ்.துரைப்பாண்டியன் நாடார் ஆவார். சுவடிகளை ஆய்வு செய்த பொழுது அதில் பெரும்பாலும் சித்த மருத்துவச் சுவடிகளே இருந்தன. ரோமரிஷி - 500, கயிலாச சட்டைமுனியார் வாத நூல் - 1000, கொங்கன மூர்த்தி அருளிச்செய்த நடுக்காண்டம், பிரம்ம முனி வைத்தியம், அகத்தியர் சவுமியசாகரம், வர்ம சூத்திரம், சர நூல், இராமதேவர் நிகண்டு - 510, கட்டு முறை வைத்தியம், வர்ம ஏடு, வைத்திய திரட்டு, சோதிடம், லோக வசியம், அவ்வையார் அருளிச்செய்த வீட்டு நெறிப் பால், நீதிநெறி, சித்த மருத்துவ கலப்பு ஏடுகள் என்ற நிலையில் அரிய சுவடிகள் இருந்தன. இச்சுவடிகளை எஸ்.எஸ்.துரைப்பாண்டியன் அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள் அவற்றைப் பாதுகாத்து நூலாக்கம் செய்ய என்னிடம் வழங்கினார். சுவடிகள் வழங்கிய குடும்பத்தார் அனைவருக்கும் தமிழன்னையின் சார்பில் நன்றி தெரிவித்து சுவடிகளைப் பெற்றுக் கொண்டேன்” என்றார். மேலும், இது போன்ற காலத்தால் மூத்த ஓலைச் சுவடிகளை திரட்டி புத்தக வடிவில் பதிவேற்றம் செய்வதால் எதிர்கால சந்ததிக்கு பயன் தரும் என்றார்.