நாகை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செங்கல் அறுக்க சென்று கரோனாவால் வேலையில்லாமல் உணவுக்கு வழியின்றி சிக்கித்தவித்த தொழிலாளர்களை தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வந்திருப்பது மனநிறைவை தந்துள்ளது. மீட்புபணியில் நக்கீரனின் பங்கு முக்கியத்துவம் கொண்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், மக்கள் பிரதிநிதிகளும்.
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் இருந்து, கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் கூலி வேலைக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கேரள மாநிலம் ஆலப்புழா, கிழக்காஞ்சேரி பகுதிக்கு சீர்காழி அருகே உள்ள எடமணல், வருஷபத்து திருவெண்காடு, மங்கைமடம், திருநகரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வேலைக்கு சென்று கரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக வேலையை இழந்து தவித்தனர். அன்றாட உணவு தேவைக்கே வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் கண்ணீரோடு தங்களின் நிலைமையை விளக்கி வீடியோவாக எடுத்து நமக்கு அனுப்பினர். அதை அடுத்த நிமிடமே சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அதை அனுப்பி மீட்க கோரினோம். அதோடு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பதிவிறக்கம் செய்து உதவிட கேட்டுக்கொண்டோம்.
அவர்களின் கண்ணீர் வீடியோவை பார்த்து முதலில் ஆர்வத்தோடு களப் பணியில் இறங்கினார்கள் சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாரதியும், நாகை ஆட்சியரும். நாகை ஆட்சியர் கேரளாவில் தவித்துவரும் தொழிலாளர்களின் தொடர்பு எண் கிடைத்தால் சுலபமாக மீட்டுக்கொண்டுவந்துவிடலாம் என்றார், உடனே நாம் பல இடங்களில் தொடர்பு கொண்டு அங்குள்ள எழிலரசி, மற்றும் குமார் என்பவர்களின் செல்போன் நம்பரை வாங்கி கொடுத்தோம் அதன்பிறகு மீட்கும் வேலையில் அரசு விதிப்படி நடைமுறைகள் முடிந்து 8 ம் தேதி இரவு சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து மீண்டுவந்துள்ள பொதுமக்கள் கூறுகையில், "எங்களது கண்ணீரை துடைத்த அனைவருக்கும் நன்றி. ஆட்சியருக்கும், எம்.எல்.ஏ பாரதிக்கும். தகவலை சரியான இடங்களுக்கு கொண்டு சேர்த்த நக்கீரனுக்கும் மிக்க நன்றி. இனி அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும், உறவுகளோடும் பெற்ற பிள்ளைகளோடு குடிப்போம். அதற்கு வழி செய்த அரசுக்கும் நன்றி," என நெஞ்சார மகிழ்ந்து கூறினார்கள்.
நமது கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடமே தொழிலாளர்களை மீட்க ஏற்பாடு செய்து மீட்டுக்கொண்டுவந்த சீர்காழி எம்.எல்.ஏ.வையும், ஆட்சியரையும் நக்கீரன் மகிழ்வோடு வாழ்த்துகிறது.