தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் கூறியுள்ளதாவது, "நாளை டாஸ்மார்க் கடைகள் எல்லாம் திறக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்கள். எப்போதும் அரசாங்கம் கடைகள் உடனடியாகத் திறக்கப்படும் என்றுதான் அறிவிப்பார்கள். இன்றைக்குச் சொல்லி நாளைக்குத் திறப்பார்கள். இதுதான் வாடிக்கையான நடைமுறையாக இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது எதற்காக நான்கு நாட்கள் இடைவெளிவிட்டார்கள் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.
40 நாட்களாக வேலைக்குச் செல்லாத காரணத்தால் யாரிடமும் பணம் இருக்காது. எனவே வீட்டில் உள்ள நகை, அண்டா, குண்டாவை அடகு வைத்துவிட்டு பணத்தோடு டாஸ்மார்க் கடைக்கு வருவதற்கே இந்த பிளான் போடப்பட்டுள்ளது. தற்போது தனிமனித இடைவெளி இல்லாமல் நிறைய கடைகள் வெளிமாநிலங்களில் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது. அங்கே தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப் படுகின்றதா? தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று பல்வேறு வகையான கடைகளை அதிகாரிகள் சீல் வைக்கிறார்கள், மளிகை, மருந்துக் கடைகளை சீல் வைக்கும் போது தனிமனித இடைவெளியைச் சிறிதும் கடைப்பிடிக்காத இந்தமாதிரியான மதுக்கடைகள் ஏன் சீல் வைக்கவில்லை.
சீல் வைத்தால் அரசுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படும். சேலத்தில் 215 கடைக்கள் இருக்கு. அதில் 65 கடைகள் சேலம் நகரத்திற்குள் இருக்கின்றது. மாவட்டம் முழுவதும் வாகனங்களைச் சோதனை செய்யும் இடங்களில் 200 போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். தற்போது மதுக்கடைகளைத் திறந்தால் அதற்கு யார் பாதுகாப்புக் கொடுப்பார்கள். ஒரு டாஸ்மார்க் கடைக்கு குறைந்தது 5 பேராவது பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லை என்றால் தனிமனித இடைவெளியை எப்படி கடைபிடிப்பார்கள். மாவட்ட முழுவதும் 150 கடைகள் இருக்கிறது. சிட்டிக்குள் 65 கடைகள் இருக்கின்றது. இந்த கடைக்கெல்லாம் காவலர்களைப் பயன்படுத்தினால் எத்தனை காவலர்கள் வருவார்கள் என்று நினைத்து பாருங்கள்.
அப்படி எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சாராயம் விற்றால் கூட, குடித்துவிட்டு அதற்குப் பிறகு கிரைம் செய்பவர்களை யார் பார்ப்பது, அப்புறம் யார் அதை கண்ட்ரோல் செய்வது. அரசாங்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதைக் கொண்டு வருகிறார்கள். இப்படித்தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றினார்கள். மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஆனால் டாஸ்மாக் கடை திறப்புக்குக் கதறி அழுவுகிறார்கள். இதைத்தான் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டுமா? இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதை வெளிப்படையாக இது காட்டுகிறது.