தற்போது சென்னை மாநகர காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இனி அபராதங்களை பேடிஎம் (paytm) மூலமும் செலுத்தலாம் என்று கூறியுள்ளது. இது பெரும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால் பேடிஎம் என்பது ஒரு தனியார் நிறுவனம், அதிலும் ஒரு போட்டி நிறைந்த தொழில் பிரிவில் உள்ள நிறுவனம். இதில் என்ன இருக்கிறது? ஒரு பிரபலமான நிறுவனத்தின் உதவியை நாடியதில் என்ன தவறு என்று நினைக்கலாம். டிஜிட்டல் இந்தியா பற்றி மூலை, முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது அரசு. ஒருவேளை அவர்கள் பேச்சோடு நிறுத்திக்கொண்டார்களா? ஒரு வழியைக் கூட அவர்கள் உருவாக்கவில்லையா?
உருவாக்கினார்கள், பீம் (BHIM) ஆப்தான் அது. பிரதமர் மோடி கூட அதை மிக பிரபலமாக்கவேண்டும் என அதைப்பற்றி பெரிதாக பேசினார். ஆனால் பீம் ஆப் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது என்ன பிரச்சனை என்றால் அரசு சார்பிலேயே பணப்பரிமாற்றத்திற்கு ஒரு ஆப் இருக்கும்போது ஏன் தனியார் ஆப்பை பயன்படுத்தவேண்டும்? அதுமட்டுமல்ல இந்தியாவை மாற்றக்கூடிய முயற்சி என கொண்டுவரப்பட்டதுதான் டிஜிட்டல் இந்தியா, அந்தத் திட்டத்தின்கீழ்தான் இந்த பீம் ஆப் வருகிறது.
ஏற்கனவே பணமதிப்புநீக்க நடவடிக்கை நடந்த பொழுது, பேடிஎம் (paytm) நிறுவனம் பத்திரிகைகளில் பிரதமர் மோடியின் படத்துடன் முழு பக்க விளம்பரம் கொடுத்தது. அப்பொழுதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இப்பொழுது அரசே இப்படி செய்திருப்பது அடுத்த கேள்விகளை எழுப்புகிறது. சென்னை மாநகர காவல்துறை ஏன் பெயரளவில் கூட பீம் ஆப்பை பயன்படுத்தவில்லை. ஒருவேளை டிஜிட்டல் இந்தியா தோற்றுவிட்டதா அல்லது இப்படி ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாதா? டிஜிட்டல் இந்தியா இப்படியே தனியாரை வளர்த்துவிட்டுகொண்டுதான் இருக்குமா இல்லை அரசு சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்த முயற்சிக்குமா?