இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். காலை நான்கு மணியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளையும் படித்துவிட்டு ஆறு மணிக்கு அதில் பலரை போனில் அழைத்து கருத்துகளை சொல்வார். தன்னை விமர்சித்து வரும் செய்திகளுக்கும்கூட விளக்கம் கொடுப்பார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பத்திரிகையாளர்களுடன் அவர் பராமரித்த உறவு பாராட்டத்தக்கது என்கின்றனர் எதிர்தரப்பு பத்திரிகையாளர்களும். அதிலும் அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
பெரியாரும்-பெரியாறும்
கலைஞருக்கு மதுரைப் பல்கலைக்கழகம், 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்த அன்று,(16-12-2006) மதுரையில் நிருபர்கள் அவரைப் பேட்டி கண்டனர். அப்போது பெரியாறு அணை குறித்து நிருபர் ஒருவர் கேட்டபோது, கலைஞர் அவர்கள், "பெரியாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, 'பெரியாறு' பற்றி கேட்கிறீர்கள். 'முல்லைப் பெரியாறு' என்று கேளுங்கள் என்றார். (நிருபர்கள் கூட்டத்தில் சிரிப்பொலி). மீண்டும் ஒருவர் பேட்டியின் இறுதியில், சசிகலா கணவர் நடராசன் வழக்கு ஒன்றிற்காக, உங்களை ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, "நீண்ட நேரம் பேட்டி கொடுத்தால், இப்படித்தான் கேள்வி கேட்பீர்களோ" என்று பலத்த சிரிப்புடன் பதில் அளித்தார். நிருபர்களும் சிரிப்பில் கலந்தனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை
1997-ம் வருடம் சந்தனகடத்தல் வீரப்பனால் 9 வனத்துறை ஊழியர்கள் கடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களை மீட்க நக்கீரன் ஆசிரியர் அரசு தூதராக நியமிக்கப்பட்டு வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும்போது 21-7-1997 அன்று தமிழக முதல்வர் கலைஞரும், கர்நாடக முதல்வர் ஜே.ஹெச்.பட்டேலும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நக்கீரன் ஆசிரியரிடமிருந்து வந்த மீட்பு முயற்சி பற்றிய தகவல்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அதில் நிருபர்கள், பிரச்சனையை வலுவாக்கும் விதமாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தவுடன், பேட்டியை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த கலைஞர் எந்தவித கோபமும் இன்றி சமயம் பார்த்துக் கொண்டிருந்த நேரம், ஒரு நிருபர், 'உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்று கேட்க, உடனடியாக கலைஞர் "அடுத்த கட்ட நடவடிக்கை எல்லோரும் சாப்பிட செல்லவேண்டியதுதான்" என்று கூறினார்.(மதிய உணவை மறந்து, நிருபர்கள் சிரித்து கலகலப்பாகினர்).
'சின்ன'ப் பிரச்சினை இல்லவே இல்லை
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையேயான பங்கீடு பற்றி பேச்சுவார்த்தைகள் அறிவாலயத்தில் நடந்தபின், நிருபர்கள் கலைஞரைப் பேட்டி கண்டனர்.
ஒருவர்: இந்தத் தேர்தலில், முக்கிய பிரச்சினையாக எது இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
கலைஞர் (சிரித்துக் கொண்டே): வெற்றி தோல்விதான் (சிரிப்பு).
மற்றவர்: உங்கள் கட்சிகளுக்கிடையே இடப்பங்கீட்டில் சின்ன பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
கலைஞர்: "சின்ன பிரச்சனையும் இல்லை. சின்னங்களிலும் பிரச்சனை இல்லை.
(மிகவும் பரபரப்பான சூழ்நிலைகளிலும், கலைஞரின் இயல்பான நகைச்சுவையுணர்வைக் கண்டு நிருபர்கள் வியந்து சிரித்து மகிழ்ந்தனர்).
பூரண மதுவிலக்கு வந்தால் சரி!
நவம்பர் 98-ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது,
ஒரு நிருபரின் கேள்வி...
"பார் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூடிவிடப் போவதாக மதுக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்களே...?
கலைஞரின் பதில்: நல்லதுதானே. அவர்கள் கடைகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தானாகவே வந்துவிடும்தானே...
(நிருபர்கள் சிரிப்பில் மூழ்கினராம்)