மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரைகளும் சோதனைக்குழாய் குழந்தை வரையிலான விஞ்ஞான வளர்ச்சியும் ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் இன்றும் குழந்தைவரம் கேட்டு காட்டேரி வேடம் அணிந்த பூசாரிகளிடம் முறத்தால் அடி வாங்கும் நம்பிக்கையும் தொடர்கிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பாக, காணும்பொங்கல் விழாவன்று எருதாட்டம், மஞ்சுவிரட்டு, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பாரம்பரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. வங்கா நரி ஜல்லிக்கட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் வனத்துறையில் அதற்கு தடை விதித்தனர்.
காணும்பொங்கலன்று வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் பெயர்பெற்ற வாழப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இந்த ஆண்டும் நூதனமான விழா நடத்தப்பட்டது. வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும்பொங்கலன்று (ஜன. 17) பேய் விரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கிராமத்தில் பேய் விரட்டும் நிகழ்ச்சி என்பது தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த விழாவை, உள்ளூரில் உள்ள ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே எடுத்துக்கட்டிச் செய்கின்றனர். விழா நடத்தும் குடும்பத்துப் பெரியவர்கள் பொங்கல் விழா தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே காலணிகள் அணியாமல், தினமும் ஒரு வேளை விரதம் இருந்து வருவதை சம்பிரதாயமாகப் பின்பற்றி வருகின்றனர். அதேநேரம் அசைவ உணவு வகைகளை அவர்கள் எப்போதும் போலவே எடுத்துக் கொள்கின்றனர்.
ஒரு காட்டேரி முறத்தால் அடித்து பேய்களை விரட்டுவதுதான் நிகழ்ச்சியின் அடிப்படை செயல்முறை. காட்டேரி வேடத்திற்காக நோன்பிருந்து வந்த ஒருவர், கருப்பு நிற ஆடை அணிந்தும், அடர்த்தியான நீளமாக தொங்கும் சவுரி முடியும் அணிந்து கொண்டு காட்டேரி போல் ஒப்பனை செய்து கொள்கிறார். நீளமான சவுரி கிடைக்காதபட்சத்தில் கிராப் வெட்டிய காட்டேரியாகவே வலம் வருகின்றனர்.
பூசாரிகள் மேளவாத்தியங்களை முழங்க காட்டேரியை உள்ளூரில் உள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு கூடியிருக்கும் பெண்களின் தலைமுடியைப் பிடித்து, அவர்களின் தலையில் மூங்கிலால் முடையப்பட்ட முறத்தால் மூன்று முறை காட்டேரி வேடமிட்ட நபர் அடிக்கிறார். பின்னர் அவர், முறத்தால் அடிவாங்கிய பெண்களுக்கு நெற்றியில் விபூதி வைத்து விடுகிறார்.
காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கினால், அதன் வலி தாங்க முடியாமல், பெண்களின் உடலை விட்டு பேய் ஓடிப்போய் விடும் அல்லது அவர்களை இனி ஒருபோதும் பேய்கள் அண்டாது என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. முறத்தடியை அந்தக் கிராமப்பெண்கள் பாதுகாப்புக் கவசம் போலவே கருதுகின்றனர்.
இது மட்டுமின்றி, காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றெல்லாம் கூட நம்புகின்றனர். இதற்காகவே உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கினர். அடி வாங்குவதில் கூட சீனியாரிட்டி உண்டு என்கிறார்கள். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டெல்லாம் சென்று அடி வாங்க முடியாதாம்.
சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி; பெரியார் மண்; பகுத்தறிவு பரப்புரைகள் ஒருபுறம் இருந்தாலும், முறத்தால் அடி வாங்கினால் பேய் ஓடும்; குழந்தை பிறக்கும்; திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கைகளும் இன்றும் கிராமங்களில் ஆழமாகப் பதிந்து கிடப்பதையும் காணமுடிகிறது.
சம்பவம் நடந்த பொன்னாரம்பட்டி என்பது பாரதிராஜா படங்களில் வருவது போன்ற நாகரீகமே என்னவென்று தெரியாத பட்டிக்காடு கிடையாது. அங்கும் செல்போன் கோபுரங்கள் முளைத்துள்ள அளவுக்கு எல்லா தொழில்நுட்பங்களும் சென்றடைந்திருக்கின்றன. ஆனாலும் இத்தகைய அர்த்தமற்ற நம்பிக்கைகளும் தொடர்வது நம் பகுத்தறிவு மண்ணுக்கு இழுக்குதான்.