கரூர் மாவட்டத்தில் உள்ளடக்கிய அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெரிய பரப்பளவு கொண்ட தொகுதி. அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டத்தின் சில பகுதிகள், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்கள், தாந்தோணி ஒன்றியத்தின் சில பகுதிகள், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, புஞ்சைபுகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, காகிதபுரம் ஆகிய 5 பேரூராட்சிகளை உள்ளடக்கியது.
இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், தலித் நாயக்கர்கள், இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட தொகுதி. இந்த தொகுதியில் திமுக, அதிமுக தலா 4 முறை, காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சிகள் தலா 1 முறை வெற்றிப்பெற்றுள்ளன.
இங்கே கடந்த 10 ஆண்டுகள் கரூர் அதிமுகவை கட்டிக்காத்த செந்தில்பாலாஜி அரசியல் கால சக்கரத்தில் தினகரன் அணியுடன் இணைந்து கடைசியில் திமுகவில் இணைத்து தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆகி இருக்கிறார்.
கடந்த அரவக்குறிச்சி தேர்தலி பணம் கொடுக்கப்பட்டதாக நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற செந்தில்பாலாஜி தான் தற்போது திமுக சார்பில் வேட்பாளர்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்திருந்த செந்தில்பாலாஜிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பது தான் தற்போது அதிமுகவில் பெரிய கேள்வியாகவும் குழப்பமாகவும் உள்ளது.
செந்தில்பாலாஜிக்கு முன்பு இங்கே அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாநில பாசறை செயலாளர் செந்தில்நாதன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஏற்கனவே அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தவர். தன்னுடைய தோல்விக்கும் காரணம் செந்தில்பாலாஜி என்று நினைத்து தற்போது வரை செந்தில்பாலாஜிக்கு எதிரும் புதிருமாக இருப்பவர் இந்த செந்தில்நாதன். இவர் தற்போது துணை சபாநாயகர் தம்பித்துரையின் அரவணைப்பில் இருப்பதால் இவர் அரவக்குறிச்சி சீட்டு தனக்கு வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்.
இதற்கு இடையில் ஜெ. உயிருடன் இருக்கும் போது மாவட்ட செயலாளர் பதவி, மற்றும் அமைச்சர் பதவியிலிந்து நீக்கப்பட்ட போது அவருக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான அமைச்சர் விஜயாஸ்கர் தன்னுடைய தம்பி சேகரை செந்தில்பாலாஜிக்கு எதிராக நிறுத்த தம்பித்துரைக்கு தெரியாமல் முதல்வர் எடப்பாடி வரை சென்று சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுகள் முஸ்லிம்களுடையது தான். இதனால் அதிகம் உள்ள சிறுபான்மைமையினர் முஸ்லீம் வேட்பாளர் நிறுத்தினால் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை கட்சியின் மேலிடத்திற்கு தகவல் கொடுத்திருப்பதால் பல்வேறு குழப்பங்களில் அதிமுக தலைமை இருக்கிறது.
தற்போது வரை செந்தில்பாலாஜியை எதிர்த்து நிற்க்கப்போகும் அந்த அதிஷ்டசாலி யார் என்கிற பேச்சே கரூரை பொறுத்தவரையில் பரபரப்பாக உள்ளது.