திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப்பொதுச்செயலார் டிடிவி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை முன்வத்தனர்.
அமமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு செல்ல அமமுக ஐ.டி விங்க்தான் காரணமா?
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எல்லாவற்றையும் விசாரிப்பேன். ஏற்கனவே எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. எனவே எல்லாவற்றையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்.
உங்கள் கட்சியில் உள்ள எல்லோரும் திமுகவுக்கு செல்கிறார்களே?
எல்லோரும் இல்லை ஏதோ ஒரு சிலர் போறாங்க. சுயநலத்திற்காக போறவங்க, சொந்த காரணத்திற்காக போறவங்க இருக்காங்க அதற்காக என்ன பண்ணமுடியும்.
இது உங்களுக்கு செய்யும் துரோகமாக தெரியவில்லையா?
நான் துரோகம் என்றெல்லாம் சொல்லவில்லை. எங்கள்கூட இருந்தார்கள் இவ்வளவு நாள் இப்பொழுது விட்டு போகிறார்கள் என்றால் அவர்களுடைய சொந்த காரணமாக இருக்கலாம். அவங்ககிட்டத்தான் நீங்க கேட்கணும்.
தங்கதமிழ்செல்வனுக்கு ஆடியோ வெளியாகிய மாதிரி புகழேந்திக்கு ஒரு வீடியோ வெளியாகியுள்ளதே?
அதை வெளியிட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும். தங்கதமிழ் செல்வன் பேசிய ஆடியோ என் கட்சிக்காரர் வெளியிட்டதுதான். என்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய ஆடியோவை முதலில் வெளியிட்டுவிட்டதுதான் என்னிடம் செல்லப்பாண்டி சொன்னார். நான் சொன்னேன் ஏன் இதையெல்லாம் வெளியிடுற என்று, அதற்கு உங்களை தாக்கி இப்படி பேசியதை நீங்கள் தடுத்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று சொன்னார். இவையெல்லாம் முன்னேற்பாடு செய்யப்பட்டு நடந்த விஷயங்கள் அல்ல. யாரோ எங்கயோ எடுத்து விடுறாங்க அதற்கு தலைமையை காரணம் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.