Skip to main content

வணிகர்களின் பாதுகாப்பு வீரர்கள் உருவாக்கிய பிரம்மதேயம்

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
வணிகர்களின் பாதுகாப்பு வீரர்கள் உருவாக்கிய பிரம்மதேயம்:
அறுநூற்று மங்கலம் கல்வெட்டில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் சிவன்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களான அறுநூற்றுவர், பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக ஊர் உருவாக்கியுள்ளதை அறியமுடிகிறது.



ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் மு.அபிநயா, மு.விசாலி, பா.அபர்ணா ஆகியோர், ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் கண்மாய்க் கரையில் இடிந்த நிலையில் உள்ள சிவன்கோவிலில் பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகளை களஆய்வின் போது கண்டுபிடித்து படி எடுத்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

இவை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன், மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில் முன்பு கிடக்கும் கற்கள், தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன.

வணிகக்குழுவின் இராணுவ அமைப்பு

இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் ‘மங்கலம்’ என அழைக்கப்பட்டன. அரசர்கள் பிராமணர்களுக்கு நிலதானம் தரும்போது தம் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர் உருவாக்கி உள்ளனர்.

அதேபோல் வணிகக் குழுக்களின் பாதுகாப்புப் படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயரில், பிராமணர்களுக்காக ஒரு ஊர் உருவாக்கி, அதை அவர்களுக்கு தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூரின் பெயர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். இதே அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது.

மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு

கோயில் முன்பாக கிடந்த ஒரு கல்வெட்டில், இராக்ஷஸ ஆண்டு துலா இரவி மாதம் புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற உத்திரத்து நாள் அரும்பூர்க் கூற்றத்து அறுநூற்று மங்கலத்து திருஅகத்தீஸ்வரமுடைய நாயனார்க்கு, பாரூர் எனும் பதினெண்பூமி நல்லூரைச் சேர்ந்த இராக்கதன் பூவண்டான் என்பவர் ராக்காலத்து பூஜைக்கு தேவையான அமுதுபடி, கறியமுது, திருவிளக்கெண்ணெய் பல நிவந்தங்களுக்குரிய செலவுக்கு அறுநூற்று மங்கலத்து பெருங்குளத்து பள்ளமடையில் இருந்து நீர் பாயும் ஒரு ‘மா’ நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குளமும், பள்ளமடையும் தற்போதும் உள்ளன. கல்வெட்டில் நிலத்தைக் குறிக்கும் ‘ரூ’ எனும் குறியீடு உள்ளது. துலா இரவி என்பது துலா மாதம் ஆகும். சமஸ்கிருத ஆண்டில் ஐப்பசி மாதத்தைத் துலா மாதம் என்கிறார்கள்.

இக்கல்வெட்டில் மன்னன் பெயர் வீரபாண்டியன் என உள்ளது. இதன் எழுத்தமைதி மற்றும் இதிலுள்ள தமிழ் ஆண்டு கொண்டு, இது கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் என அறியமுடிகிறது. இம்மன்னனின் 18 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டின் ஆங்கில ஆண்டு கி.பி.1315 ஆகும்.

பதினெண்பூமி என்பது வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழு ஆகும். இவர்களின் குடியிருப்பு பாரூரில் உருவானபின் பதினெண்பூமிநல்லூர் என அவ்வூர் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். பாரூர் திருவாடானை அருகில் உள்ளது.



முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு

கண்மாய்க்கரையில் நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு கல்லில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) மூன்று வரி கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இம்மன்னன் சோழநாட்டைக் கைப்பற்றி, பின் அவர்களிடமே வழங்கிய வரலாற்றுச் செய்தி இதில் உள்ளது.

முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு

மற்றொரு கல்வெட்டு கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் 13ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. இதன் காலம் கி.பி.1266 ஆகும்.

குலமாணிக்கம் சுந்தரபாண்டிய நல்லூர் குணாபதபெருமாள் என்பவர் இக்கோயில் இறைவனுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். குலமாணிக்கம் என்ற ஊர் பெயர் பிற்காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. குலமாணிக்கம் இங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. அறுநூற்று மங்கலம், அரும்பொற்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இது அரும்பூர் கூற்றம் என மாறியுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்