எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளை சார்பில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. 2023க்கான விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன், நடிகர் டெல்லி கணேஷ், நக்கீரன் ஆசிரியர், ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் டெல்லிகணேஷ் பேசியதாவது: “பாலகுமாரனோடு எனக்கு மிகுந்த நட்பு இருந்தது. நாயகன் படப்பிடிப்பில் பாலகுமாரன் ஒரு மாற்றம் சொல்ல, கமல் அதை மறுத்தார். என்னுடைய கேரக்டர் மருத்துவமனையில் சாகவேண்டும் என்று பாலகுமாரனும், சாகக்கூடாது என்று கமலும் சொன்னார்கள். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் கமலே ஜெயித்தார். அந்த நேரத்தில் நான் ஒரு மாருதி 800 கார் வாங்கினேன். அதைப் பார்க்க வேண்டும் என்று பாலகுமாரன் விரும்பினார். என்னோடு அந்தக் காரில் பயணம் செய்து, நான் மென்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்தினார். அவர் சொன்னது பலித்தது. என்னால் அதை மறக்கவே முடியாது.
கவர்னர் இல.கணேசன் மிகவும் எளிமையானவர். ஒவ்வொரு விழாவுக்கும் நேரில் வந்து பத்திரிகை வைப்பார். இலக்கியத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. வண்ணநிலவன் தைரியமாக எழுதக்கூடியவர். விளைவுகள் பற்றி கவலைப்பட மாட்டார். யாரையும் எளிதில் பாராட்டாத வண்ணநிலவன், ஒருமுறை துக்ளக்கில் என்னைப் பாராட்டி எழுதினார். அதற்காக அவரை அழைத்து நன்றி கூறினேன். அவர் இப்போது இந்த சிறப்பான விருதினை வாங்குகிறார்.
நக்கீரன் கோபால் என்னுடைய இனிய நண்பர். அடிக்கடி நானும் அவரும் ஏர்போர்ட்டில் சந்தித்துக் கொள்வோம். எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் என்னிடம் நின்று பேசிவிட்டுத் தான் செல்வார். ஒரு விளம்பரத்துக்காக அவருடைய அலுவலகம் சென்றிருந்தேன். அப்போது நக்கீரன் கோபால் எனக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். ஜோதிடர் ஷெல்வியை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இங்கு அனைவரையும் பார்த்தது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.”