உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாவ் தொகுதியில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வாக அப்பாஸ் அன்சாரி இருக்கிறார். இவர் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதி ஆவார். மேலும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்டவர். தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கிடையில் அப்பாஸ் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சித்ரகுட் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அப்பாஸுக்கு நிக்கத் பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் தன் கணவர் அப்பாஸுடன் சித்ரகுட் சிறையில் பகலில் அன்றாடம் தங்கி வந்திருக்கிறார். ஆனால் நிக்கத்தின் வருகை சிறை பார்வையாளர் பதிவேட்டில் எழுதப்படவில்லை. இந்த சந்திப்புகள் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகரின் அலுவலக அறையிலேயே நடைபெற்றிருக்கிறது. இந்த தகவல் வெளியில் கசியவே, சித்ரகுட் மாவட்ட எஸ்.பி. பிருந்தா சுக்லா இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.
இதற்காக சித்தரகுட் ஆட்சியர் அபிஷேக் ஆனந்துடன் ரகசியமாக தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதி அப்பாஸின் அறை காலியாக இருந்தது. பிறகு சிறையின் அனைத்து அதிகாரிகளையும் தம்முடன் வந்த காவல் படையை கொண்டு சோதனை செய்திருக்கிறார். இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறை உள்பக்கம் தாழிட்டவாறு இருந்தது. அதற்குள் கைதி அப்பாஸ் தன்னுடைய மனைவி நிக்கத்துடன் சிக்கினார்.
அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் சிக்கியிருக்கின்றன. விசாரணையில் அப்பாஸ் கடந்த ஒன்றரை மாதமாக மனைவி நிக்கத்துடன் அந்த அறையில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. இத்துடன் அப்பாஸ் தன் மனைவியின் கைப்பேசிகள் மூலம் தன்னுடைய வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக புகார் இருக்கிறது.
இவர்களை கையும் களவுமாக பிடித்த இளம் எஸ்.பி. பிருந்தா, வட இந்தியா முழுவதிலும் பிரபலமாகி பாராட்டை பெற்று வருகிறார். இதனிடையே, கைதி அப்பாஸுக்கு உதவியதாக சிறை அதிகாரிகள் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கைதி அப்பாஸை வேறு சிறைக்கு மாற்றி அவரின், சிறை வழக்கு உ.பி. அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக தன் கணவருடன் சிறையிலிருந்த நிக்கத் தற்போது சட்டப்படி அதனுள் கைதியாக இருக்கிறார்.
அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் சிக்கியிருக்கிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தார் அன்சாரி. இவர் சிறையில் இருந்தபடி பலமுறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். முக்தார் மீது 30 வழக்குகள் இருக்கின்றன. முக்தாரின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது...