பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா (கொல்கத்தாவின் இளவரசன்), ஆஃப்-சைடின் கடவுள், தாதா, இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்... இதெல்லாம் அவரைப் பிடித்தவருக்கு... கோபக்காரர், ஆணவக்காரர், நக்மாவுடன் காதலில் இருந்தவர், சுயநலத்துக்காக விளையாடுபவர்... இதெல்லாம் அவரை வெறுப்பவர்களுக்கு... விரும்பினாலும் வெறுத்தாலும் கிரிக்கெட்டில் பேசப்பட்டுக்கொண்டே இருந்தவர்தான் சவ்ரவ் கங்குலி. இன்று அவரது பிறந்தநாள்.
8/7/1972, கொல்கத்தாவில் சந்திதாஸ் கங்குலி – நிருபா கங்குலி தம்பதியருக்கு இளைய, செல்ல மகனாக பிறந்தவர் சவ்ரவ் கங்குலி. இவர் சிறு வயதிலிருந்தே வசதியான வாழ்கையை வாழ்ந்தவர். செல்ல பெயராக மகாராஜா என்றே குடும்பத்தினருள் அழைக்கப்பட்டார். இவரது அண்ணன் ஸ்நேஹசிஷ் பெங்கால் அணிக்காக விளையாடியவர். கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த கங்குலிக்கு முதலில் கால்பந்து மேல் விருப்பமென்றாலும் பின்னர் அண்ணன் வழியில் கிரிக்கெட்டுக்கு வந்தார். இவரது வீட்டிலேயே பயிற்சி பெற சிமென்ட் தரை பிட்ச்சை கங்குலியின் தந்தை தயார்செய்தார்.15 வயதுஉட்பட்டவர்களின் கிரிக்கெட் போட்டியில் ஒரிசாவிற்கு எதிரான ஆட்டத்தில் இவர் சதம் அடித்ததால், தான் பயின்ற ‘செயின்ட் சேவியர் பள்ளியின்’ கிரிக்கெட் அணிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989-ஆம் ஆண்டு பெங்கால் அணிக்காக முதல்முறையாக ‘பர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்’ என்னும் போட்டியில் களம்கண்டார். பின் தனது நேர்த்தியான ஆட்டத்திறமையினால் 1992-ல் மேற்குஇந்திய தீவு அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பை பெற்றார். அதில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அந்தப் போட்டியில் சக வீரர்களுக்கு தண்ணீர், குளிர்பானம் கொண்டு சென்று கொடுக்கும் வேலையை செய்ய மறுத்தார் என்பதும் அவரை நீக்க காரணம் என்று அப்போது பேசப்பட்டது. முதல் போட்டியிலேயே சர்ச்சையுடன் தொடங்கினார் கங்குலி.
பின் 1993-ல் இருந்து 1996 வரையில் நடைபெற்ற ‘ரஞ்சி கோப்பை’, ‘துலீப் கோப்பை’களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதன் பலனாக 1996-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். மே 26, 27-ல் நடந்த இந்திய – இங்கிலாந்து போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 83-பந்துகளில் 3-பவுண்ட்ரி உட்பட 46-ரன்கள் எடுத்தார். பின் அந்த போட்டியில் 2-ஓவர்கள் பந்துவீச்சும் செய்தார்.
டெஸ்ட் போட்டி அணியில் 11-பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி பட்டியலில் கங்குலி இடம்பெறவில்லை. நவ்ஜோத் சிங் சித்து காயம் காரணமாக 2-ஆவது போட்டியிலிருந்து விலகியதால் கங்குலி இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆடிய முதல் இன்னிங்ஸ்-ல் 301-பந்துகளில் 20பவுண்ட்ரிகள் உட்பட 131 ரன்கள் விளாசி அசத்தினார். இங்கிலாந்தின் புகழ் பெற்ற ‘லார்ட்ஸ்’ மைதானத்தில் முதலில் ஆடிய போட்டியிலேயே அவர் அடித்த இந்த ரன்னை அதற்கு பின் அங்கு டெஸ்ட் போட்டியில் முதல்முதலில் ஆடிய யாரும் முந்தவில்லை. அன்றிலிருந்து பல ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டிற்கும் ஒரு இளவரசன் போல்தான் வலம் வந்தார் கங்குலி.
அதற்குப் பின் தொடர்ந்து அவர் இந்திய அணிக்காக விளையாடினார். பின் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி 1997-ல் தனது சிறு வயது தோழியான டோனா ராய் என்னும் பெண்ணை மணந்தது கொண்டார். இவர்களது திருமணம் 'அலைபாயுதே' ஸ்டைலில் நடந்தது. முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின் தந்தைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் அனுமதி கண்டிப்பாக கிடைக்காது என்று தெரிந்து ரகசிய திருமணம் செய்துகொண்டு ஆறு மாதத்திற்கு அமைதியாக இருந்தனர். பின்னர் விஷயம் குடும்பத்திற்குத் தெரிந்து பல பிரச்சனைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ திருமணம் நடந்தது.
1999 லண்டனில் நடந்த கிரிக்கெட் உலககோப்பை போட்டியில் கங்குலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கங்குலி 158பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உட்பட 183 ரன்கள் அடித்தார். அதுமட்டுமின்றி அந்த போட்டியில் கங்குலி – டிராவிட் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 318 ரன்களை சேர்த்தனர். இதுவே இன்றுவரை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்.
சிறப்பாக ஆடினாலும் கங்குலி மீது விமர்சனங்களும், கிசுகிசுக்களும் இருந்தது. 1999 லண்டனில் நடந்த உலககோப்பை நடந்த பொழுது ‘நக்மா’ (ஜோதிகா-வின் அக்கா) கங்குலியைப் பார்க்க லண்டன் சென்றார் என்று செய்தி வந்தது. அது வளர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அந்த காலகட்டம் கிரிக்கெட்டிலும் கங்குலிக்கு தொய்வாக அமைந்தது. நக்மா நட்பால்தான் கிரிக்கெட் போனது என்று செய்திகள் பரவ, அவர் கிரிக்கெட்டில் தொய்வடைந்ததால்தான் ஆறுதலாக நட்பு வளர்த்தேன் என்று நக்மா பின்னர் கூறினார்.
சரிவுகள் சரியாகி 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் கங்குலி தென்அமெரிக்காவுடனான போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். கேப்டன் ஆன பின்னர் 2002-ல் நடந்த (இந்திய – இங்கிலாந்து) ‘நாட்-வெஸ்ட்’ போட்டியின் பொழுது மிகப்பெரும் சர்ச்சை ஒன்று எழுந்தது. ஜூலை 13, 2002 நடந்த போட்டியில் ‘இந்திய அணி 325 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றதும் கங்குலி தன் சட்டையை கழற்றி, சுழற்றி வெறும் உடம்போடு கொண்டாடியது’ என்பது. இது இங்கிலாந்து அணி முன்னால் வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை கங்குலி சாமர்த்தியமான பதில்களுடன் எதிர்கொண்டார். "கிரிக்கெட் வீரர்களின் 'மெக்கா'வான லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் சட்டையைக் கழற்றி சுற்றியது சரியா?" என்று அவர்கள் கேட்க "உங்களுக்கு லார்ட்ஸ் என்றால் எங்களுக்கு மும்பை வான்கடே மைதானம். அங்கு உங்கள் அணியினர் முன்னர் சட்டையைக் கழற்றி சுற்றினர்" என்கிறார் கங்குலி.
2003-ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார் கங்குலி. இறுதிவரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனினும் தனது தேர்ந்த முடிவுகளால், அணியின் பலமாக விளங்கினார் கங்குலி. பின் 2004 – 2005-ல் தனது ஆட்டம் தொய்வு பெற அவரை இந்திய ஒரு நாள் போட்டியின் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2006 ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
மீண்டும் 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்திய அணி கங்குலி இன்றி சந்தித்த ‘ஐ.சி.சி- உலககோப்பை’ போட்டியில் தோல்வியடைந்தது. இப்படி ஆன நிலையில் மீண்டும் கங்குலி-யை சேர்த்ததால் புத்துணர்வு பெற்ற இந்திய அணி மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அந்த சமயம் ‘இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா’ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டதால் இந்திய அணி மேலும் பலம் வாய்ந்ததாக இருந்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பெலால் (முன்னால் ஆஸ்திரேலியா அணி வீரர்) கங்குலி ஒதுக்கப்படுகிறார் என்று பேசப்பட்டது.
ஐ.பி.எல். வந்த சமயத்தில் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொல்கத்தா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ‘இந்திய - ஆஸ்திரேலியா’ டெஸ்ட் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடிய கங்குலி, கடைசி டெஸ்ட் போட்டியின் முடிவில் தனது ஓய்வை அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது.
கங்குலிக்கு இந்திய அரசு 2004ஆம் ஆண்டு ‘பத்ம-ஸ்ரீ’ விருது அளித்து கௌரவப்படுத்தியது. மேலும் 2013ல் ‘பங்கா பிபுஷன்’ என்னும் விருது மேற்குவங்க அரசால் அளிக்கப்பட்டது. அரசுகள் அளித்த பெருமையை தாண்டி இவருக்கென்றே தனி முத்திரையாக பல பெயர்கள் உள்ளன. ‘ஆப்-சைடின் கடவுள்’ (god of offside) என்று டிராவிட்-டால் புகழ்பாட பெற்றார். ‘கொல்கத்தாவின் இளவரசன்’ (prince of kolkata) என்று அழைக்கப்பட்டார். ‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ என்று சொல்லப்படும் விஸ்டென் (wisden) என்னும் ஆண்டு புத்தக்கத்தில் என்றென்றும் தலைசிறந்த ஒரு நாள் ஆட்டக்காரர் (6ஆவது இடத்தில் உள்ளார்) என்று கூறப்பட்டது.
கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து, 8ஆவதாக அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் கொண்டு தற்பொழுது பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைமை பொறுப்பில் உள்ள கங்குலி ‘எ சென்சுரி இஸ் நாட் இனஃப்’ (a century is not enough) என்ற பெயரில் தன் அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். உண்மைதான், இவரது வாழ்வுக்கு ஒரு நூற்றாண்டு பத்தாதுதான்.