Skip to main content

ஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது நீதிமன்றம்?

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

உலகில் சுமார் எழுபத்தி இரண்டு நாடுகளில் ஓரினச்சேர்க்கை என்பது இன்னும்  குற்றமாகத்தான் இருக்கிறது. அதில் பன்னிரெண்டு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் மரணதண்டனையும் அளிக்கப்படுகிறது. ஓரினச்சேர்க்கையை குற்றம் என்று சொல்லும் எழுபத்தி இரண்டு நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. நேற்று (10 ஜூலை 2018) இந்த ஓரினச்சேர்க்கை குறித்த வழக்கின் விசாரணையை உடனடியாக எடுத்து விசாரித்தது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், பி.எப்.நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். 

 

lgbt

 

குற்றம் என்று சொல்லப்படும் இந்த ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்பது அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும்  ஆதரிப்பவர்களின் கருத்து. மத்திய அரசும் இன்னும் சில தரப்பினரும் இந்த விஷயத்தை எதிர்த்துதான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ஓரினச்சேர்க்கை இந்தியாவில் எப்படி குற்றமானது என்பதைப் பார்ப்போம். பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டு நீதிமன்றங்கள் செயல்படுத்தப்பட்டன, அதில் பலவற்றை இந்திய சட்டம் இணைத்துக்கொண்டு பின்பற்றுகிறது. இந்திய சட்டத்தில் செக்ஷன் 377 ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் என்று சொல்கிறது. செக்ஷன் 377, இயற்கைக்கு மாறான குற்றங்கள் மற்றும் இயற்கைக்கு மாறாக எந்த ஆணுடனும், பெண்ணுடனும் மற்றும் விலங்குங்களிடம் உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்கு தண்டனையாக ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படும். இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

lgbt
 
உலக அளவில் பார்த்தால் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பல நாடுகள் ஓரினச்சேர்க்கையை ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அங்கெல்லாம் இது இயற்கைக்கு விரோதமானதல்ல, ஓரினச்சேர்க்கை என்பதும் இயற்கையானதுதான் என்று சொல்லப்படுகிறது. இன்னும் பலர் குற்றம் என்பதைத் தாண்டி இதை ஒரு கலாச்சார சீர்கேடாகவே பார்க்கின்றனர். கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் காலத்திக்கேற்ப சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமென்ற கருத்துடன் செக்ஷன் 377இல் சொல்லப்பட்டது போல் ஓரினச்சேர்க்கை என்பது குற்றமல்ல தெரிவித்தது. இதை எதிர்த்து அரசும் சில அடிப்படைவாத அமைப்புகளும் இதை எதிர்த்தன. மீண்டும் உச்சநீதிமன்றம், 'நீதிமன்றங்கள் சட்டத்தைத்தான் கருத முடியும், தர்மங்களை நிர்ணயிக்க முடியாது' என்று கூறி தடை தொடருமென அறிவித்தது. பல்வேறு அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் இதற்காக பல்வேறு தளங்களில் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

 

 


பிரிவு 377ன் கீழ் வெகு சில வழக்குகளே பதியப்படுகின்றன என்றாலும் அந்த சட்டம் வெளிப்படைத்தன்மையை குறைத்து நோய், சுதந்திரமின்மை, மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதென்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சமீப காலமாகத்தான் LGBT அமைப்புகள், ஓரின சேர்க்கை விருப்பம் உடையவர்கள் ஊர்வலம், கூட்டங்களை நடத்தி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இது குறித்த குறும்படங்கள், திரைப்படங்கள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.

"இதற்கெல்லாம் இந்தியா இன்னும் தயாராகவில்லை. இது பெருமையல்ல, நோய். இந்த மனநிலையை சரி செய்வதற்கான வழியை மருத்துவர்களைக் கொண்டு ஆராய வேண்டும்" என்று பாஜகவின் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். 

விவாதங்கள் தொடருகின்றன... உணர்வுகள் வெடித்து வெளியே வருகின்றன...  விடுதலை கிடைக்குமா? விடை வரும்வரை காத்திருப்போம்...