மதுரை மாட்டுத்தாவணி (எம்.ஜி.ஆர்.) பேருந்து நிலையத்தில் டவுன் பஸ் வராத காரணத்தால், பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். அதனால், பேருந்துகளே வராத நிலையமாக வெறிச்சொடிக் கிடந்தது. ஏனென்று கேட்டால், “கண்டக்டர், டிரைவர்கள் தீபாவளி கொண்டாட வேண்டாமா? அவங்கள்ல பலரும் வேலைக்கு வரல. பஸ்ஸும் ஓடல” என்று கூலாகச் சொன்னார், அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர். ஆட்டோ கட்டணம் அதிகம் கேட்பதால், கால் வலிக்க நின்று, பஸ் வந்தபிறகே செல்லவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர், பயணிகள். “நல்ல நாளும் அதுவுமா ஊருக்கு வந்தும் வீடு போய்ச் சேர முடியல” என்பது, பயணிகளின் கவலையாக இருந்தது.
அதே மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், வாகனக் காப்பகத்தில் அயராது பணியாற்றிக் கொண்டிருந்தனர், அதன் ஊழியர்கள். டூ வீலர்கள் 3000-க்கு மேல் அந்த வாகனக் காப்பகத்தில் நின்றன. 12 மணி நேர வேலை. இரவு, பகல் என இரண்டு ஷிப்ட். 15 பேர் வேலை பார்க்கின்றனர். நாளொன்றுக்கு ரூ.250 சம்பளம், டீ செலவுக்கு ரூ.25 தருகிறார், ஒப்பந்தகாரர் ரகு. 12 மணி நேரம் ஆணியடித்ததுபோல் உட்கார்ந்த இடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நல்ல வருவாய் இருந்தும், போனஸ் கொடுப்பதற்கு ஒப்பந்தகாரருக்கு மனமில்லை. பரிதாபமாகப் புலம்பினார்கள், அந்த வாகனக் காப்பக ஊழியர்கள். ஒப்பந்தகாரர் ரகுவிடம் நாம் பேசினோம். “அப்படியா? பார்ட்னர் போனஸ் கொடுக்கலியா? நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது. நான் எப்போதாவது அங்கு போவேன். என்னை யாரென்றே அங்கு வேலை பார்ப்பவர்களுக்குத் தெரியாது. பார்ட்னரிடம் பேசி, ஏதாவது கொடுக்கச் சொல்கிறேன்” என்றார். ஒட்டிய வயிறுடன் காணப்படும் வாகனக் காப்பக ஊழியர்களுக்கு, ஒப்பந்தகாரர் தாராள மனதுடன் போனஸ் கொடுத்தால் சரிதான்!
மதுரை ராஜாஜி பூங்கா பகுதியில் தீபாவளி நாளென்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் வெள்ளரிக்காய்களையும் கொய்யாக்காய்களையும் பிளாட்பாரத்தில் பரப்பி, வாடிக்கையாளர்கள் யாரேனும் வருவார்களா என்ற எதிர்பார்ப்பை முகத்தில் தேக்கியபடி உட்கார்ந்திருந்தார், மூதாட்டி வெள்ளாயி. அவரது கடைக்கு எதிர் பிளாட்பாரத்தில், அந்தப் பகல் நேரத்திலும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார், முனியசாமி. இடது முழங்காலுக்குக் கீழே பாதி கால் இல்லை. இரண்டு கால்களிலும் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. வெள்ளாயி சொன்னார் – “பாவம் முனியசாமி. இப்பத்தான் புண்ணியவான் ஒருத்தர் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாரு. சாப்பிட்டு அசந்து தூங்குறான்” என்று தனது நிலையை மறந்து ‘உச்’ கொட்டினார்.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்பது அரசின் அறிவிப்பு. மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடையிருந்தும், கொண்டாட்ட மனநிலையில் இருந்த பலரும், தடையைத் தாராளமாக மீறினார்கள். வடக்கு வெளி வீதியில் பூர்விகா ஃபோன் கடை ஊழியர், பேருந்து வருவதைக்கூட கவனிக்காமல், சாலையில் வெடியில் திரியைப் பற்றவைத்து வெடிக்கச் செய்தார். தடை குறித்து ஊழியர் முருகனிடம் கேட்டபோது “என்ன சார்? இந்த நேரத்துல வெடி போடக்கூடாதா? நாங்கள்லாம் காலகாலமா வெடி வைத்துப் பழகிட்டோம். இதெல்லாம் பெரிய குற்றம்னா.. போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணட்டும்” என்று சிரித்துக்கொண்டே அடுத்த திரியைப் பற்றவைத்தார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காவல்காரர் சண்முகம், பட்டாசு பார்சல், அரிசி மூடை சகிதமாக, சொந்த ஊருக்கு டூ வீலரில் போய்க்கொண்டிருந்தார். ‘சாயங்காலம் ஆகப்போகுது. இன்னும் தீபாவளி உங்களுக்கு வரலியா?’ என்று கேட்டோம். “போலீஸ் வேலைன்னா இப்படித்தான். வீட்டுக்குப் போயி இனிமேதான் தீபாவளி கொண்டாடனும். என்னை மாதிரி போலீசுக்கு விடிகாலைல கொண்டாட்டம் கிடையாது. ராத்திரிலதான் எங்களுக்கு விடியும்” என்று டூ வீலரைக் கிளப்பினார்.
ரஜினி ரசிகர்கள் ‘ஆட்சி என்ன? அரசன் என்ன? எங்க அண்ணாத்த அதுக்கும் மேல..’, ‘ஆளுமையாய் அரியணையில் எதிர்பார்த்த எங்களுக்கு ஆறுதலாய் வரும் அண்ணாத்த..’ என்று போஸ்டர்களில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
எந்தக் கவலையும் இல்லாமல், தீபாவளிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ‘செட் டிரஸ்’ எனப்படும் ஒரேமாதிரியான உடையில், சாலையில் அரட்டையடித்தபடி நடந்து சென்றனர், தோழிகள் ஆறேழுபேர். அவர்களை ‘கிராஸ்’ செய்தபோது, ‘ஹேப்பி தீபாவளி’ என்று சத்தமாகச் சொன்னார்கள். நமக்கோ, முனியசாமி, வெள்ளாயி, வாகனக் காப்பக ஊழியர்கள் மனத்திரையில் விரிந்தனர். ஆனாலும், முகத்தில் போலியாகச் சிரிப்பை வரவழைத்து ‘ஹேப்பி தீபாவளி’ சொன்னோம்.
இருட்ட ஆரம்பித்தது. ஒருவழியாக, எல்லா தரப்பினரும் தீபாவளி நாளைக் கடந்து கொண்டிருந்தனர்.