நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி.
''தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் நாங்கள் சென்ற இடங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. என்னுடைய அரசியல் அனுபவித்தில் அதை வைத்து பார்க்கும்போது கணிசமான வெற்றிகளை எதிர்பாத்தோம். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியிருக்கிறார்.
மம்தா பானர்ஜி சொன்னபடி பல குளறுபடிகள் இந்த தேர்தலில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறது. தேனியில் மட்டும் எப்படி அதிமுக வெற்றி பெறும்? தேனி தொகுதிக்குள் வரும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக எப்படி தோல்வி அடையும்?
எங்களது வேட்பாளர்கள் சொல்வது என்னவென்றால் பல பூத்துக்களில் பூஜ்ஜியம் காண்பிக்கிறது என்றுதான். இதுவரை நாங்கள் கணக்கெடுத்துள்ளபடி 1800 பூத்துக்களில் பூஜ்ஜியம் என காண்பிக்கிறது. வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குகள் கூட எங்கே சென்றது? எங்கள் கட்சியின் தாம்பரம் நாராயணன் உள்பட எல்லோரும் கேட்டு வருவது அதைத்தான். அமமுக வரக்கூடாது என்று திட்டமிட்டு செய்துள்ளனர்.
கடைசி நேரத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது பரிசுப் பெட்டகம் சின்னம். இதனை கொண்டு சேர்க்க காலம் குறைவாக இருந்தது. அப்படி இருந்தும் கொண்டு சேர்த்தோம். நாங்கள் தோற்கவில்லை. பாஜகவை எதிர்த்து பேசியதால் திட்டமிட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.
1996ல் பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். அப்போது சில நிர்வாகிகள் கட்சியைவிட்டு சென்றனர். போகிறவர்கள் போகட்டும் என்றுதான் ஜெயலலிதா சொன்னார், அதற்காக அவர் சோர்ந்துவிடவில்லை. அவரது தலைமையை ஏற்று தொண்டர்கள் அப்படியே இருந்தனர். அதற்கு பிறகு தேர்தலை சந்தித்தார். வெற்றி பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 அதிமுக எம்பிக்களை பெற்றுக்கொடுத்தார். 2011ஐ தொடர்ந்து 2016 சட்மன்றத்தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை கொடுத்தார். அதைப்போலவேதான் தினகரனும் சொல்லுகிறார் போகிறவர்கள் போகட்டும் என்று. சில நிர்வாகிகள்தான் செல்கிறார்களே தவிர தொண்டர்கள் செல்லவில்லை. ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 10 வருடமாக கடுமையாக போராடித்தான் வந்தார். திமுக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுகூட வரவில்லை அதற்காக திமுக சோர்ந்துவிட்டதா? 7 வருடமாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்பதால் திமுக சோர்ந்துவிட்டதா?
நாங்கள் கட்சி தொடங்கி 13 மாதங்கள்தான் ஆகிறது. தொண்டர்களுடன் தமிழக அரசியலில் தொடர்ந்து பயணிப்போம். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்போம், வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலை சந்திப்போம், உள்ளாட்சித் தேர்தலையும் சந்திப்போம். இதற்கிடையில் கட்சி தலைமை தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் அறிவிக்கும். அதனை நடத்துவோம். அதிமுக - அமமுக இணையுமா? இணையாதா? என்பதெல்லாம் தினகரன், சசிகலா எடுக்கக்கூடிய முடிவு. அவர்கள் தலைமையை ஏற்றுள்ள நாங்கள் அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம்''.