ஒவ்வொரு நாளும் சென்னையில் மட்டும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கூடுகிறது. “ சென்னையில் 2 வாரங்களுக்கு கடைகளை மூடத் தயார்” என வணிகர் சங்கத்தினர் முன்வந்திருக்கும் நிலையில், அரசாங்கம் இன்னமும் முடிவு எடுக்காமல் இருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனிவரும் காலங்களில் கரோனா பரிசோதனை செய்பவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
தனிமைப்படுத்துவோம் என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவார்களா? கல்லூரிகளில் தங்க வைப்பார்களா? இதையெல்லாம் கண்காணிப்பது யார்? என்ற விபரத்தை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. சரி சொந்த ஊருக்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவர்களுக்கு (மருத்துவச் சேவை தவிர) இ-பாஸ் வழங்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முன்பு ஒரு வீட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அந்தத் தெருவே பேரிகார்டு, இரும்புத் தகரம் கொண்டு அடைக்கப்படும். 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இப்ப நிலைமை அப்படியில்லை.
அதேபோல, போலீஸ்காரர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால், அந்தக் காவல் நிலையமே 10 நாளைக்கு மூடப்படும். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளருக்குச் சில தினங்களுக்கு முன்னர் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவரது மனைவி, மகள், மகன் என 3 பேருக்கு கரோனா பரவியது. பின்னர் ஆய்வாளரின் 2 ஓட்டுனர், 2 உதவி ஆய்வாளர், ஒரு காவலர் என அந்தக் காவல் நிலையத்தில் மட்டும் 6 பேர் இப்போது குவாரன்டைனில் இருக்கின்றனர். இருந்தும் காவல் நிலையம் வழக்கம்போல் இயங்குகிறது. இப்படிபட்ட சூழலில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் அதிக பரிசோதனை பண்ணுவதே நோயாளிகள் எண்ணிக்கைக்கு காரணம் என்று சொல்கிறது. ஒருவகையில் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஜூன் 10-ஆம் தேதி நிலவரப்படி ஏழரைக் கோடி ஜனத்தொகை கொண்ட தமிழ்நாட்டில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 846 பேரை பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை (மக்கள் தொகை குறைவு என்றாலும்) பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குஜராத்தில் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 79 லட்சம் பேர். ஆனால், அங்கு இதுவரை 2.66 லட்சம் பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகள் எண்ணிக்கை 24,544, இறப்பு எண்ணிக்கை 1,347. நோயாளிகள் எண்ணிக்கையிலும் பலி எண்ணிக்கையிலும் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் இதுவரை 6.10 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 94,041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 12.21 கோடி பேர் மக்கள் தொகை. ஆனால், பரிசோதனை தமிழ்நாட்டைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகை 22.50 கோடி. ஆனால், அங்கு இதுவரை வெறும் 4.04 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்திருக்கின்றனர். இதனால், அங்கு 11,610 என்ற அளவில் நோயாளிகள் எண்ணிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் அங்கு அதிகம். இதுவரை 321-ஆக உயர்ந்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு என்றாலும், அங்கு பரிசோதனையும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த 3 மாதத்தில் 1.31 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்கை முன்கூட்டியே முழுமையாகக் கடைப்பிடித்ததால் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது நோயாளிகள் எண்ணிக்கை.
இப்படி மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகம். அதனால் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்கிறது அரசாங்கம். அதேபோல் கட்டுப்பாடுகளும் தாராளமாகத் தளர்த்தப்பட்டதால், கரோனாவிற்குக் கொண்டாட்டமாகி விட்டது. இனிமேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழுஊரடங்கை அமல்படுத்தினால் தான் தலைநகர் தப்பும்!