கொரோனா வைரஸ் தாக்குதலால் 21 நாட்களுக்கு தேசத்தை முடக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதனால் பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களையும் இலவசங்களையும் அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதேபோல, நாட்டுமக்களுக்கு உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களின் நலன் சார்ந்த இலவசங்களையும் நிதி உதவியையும் அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்குதலை தடுப்பதற்காக மத்திய அரசிடம் கூடுதலாக 4000 கோடி நிதி உதவியையும் கேட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் அது சார்ந்த பல்வேறு பணிகளுக்காக வெளியிலிருந்து நிதி திரட்டுவதிலும் ஈடுப்பட்டுள்ளது எடப்பாடி அரசு. அரசின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை அரசுக்கு வழங்குவார்கள் என அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது தமிழகத்தில் திமுகவுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வின் தற்போதைய மாத சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய். அதன்படி திமுக எம்.எல்.ஏ.க்கள் 98 பேரின் 1 மாத சம்பளம் 1 கோடியே 29 லட்சம் ரூபாய். கொரோனா வைரஸை தடுப்பதற்கான பணிகளுக்காக இந்த தொகை அப்படியே முதல்வரின் நிவாரண நிதிஉதவி திட்டத்தில் சேர்கிறது.
அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அறிவித்தார். ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடத்துக்கு 5 கோடி ரூபாயை ஒதுக்குகிறது மத்திய அரசு. அந்த வகையில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள அன்புமணி, ’’தேவைப்பட்டால் இன்னும் ஒதுக்குவேன் ‘’ என அறிவித்துள்ளார்.
அன்புமணியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே தமிழக எம்.பி.க்கள் பலரும் நிதி ஒதுக்க முன் வந்திருக்கிறார்கள். கன்யாகுமாரி மாவட்ட அதிமுக எம்.பி. விஜயகுமார் 1 கோடி ரூபாய், அதிமுகவின் தேனி மாவட்ட எம்.பி.யும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத் 1 கோடி ரூபாயும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
அதேபோல, தனது சொந்த பணத்திலிருந்து 25 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் கே.பி.முனுசாமி. நெல்லை எம்.பி. ஞானதிரவியம், 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதனையடுத்து பணம் படைத்த தொழிலதிபர்கள் பலரும் நிதி உதவியளிக்க துவங்கியுள்ளனர். கொரோனா வைரஸால் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண தொழில்கள் வரை முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சில பல கோடிகளை ஒதுக்குவதன் மூலம் எந்த வகையிலும் பாதிக்காத தொழிலதிபர்கள் அரசுக்கு நிதி உதவியளிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முதல்வர் எடப்பாடி அரசுக்கு இருக்கிறது.