சமூக பிரச்சனைகளைக் கண்டு சீறவேண்டிய அரசியல்வாதிகள் சிலசமயம் சிரிப்புகாட்டும் விதமாகவோ, சர்ச்சையாகும் விதமாகவோ எதையாவது பேசி சிக்கலில் சிக்கிக்கொள்வது வழக்கம். இதில் நம் உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத்தலைவர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல. அந்தவகையில், 2020 ஆம் ஆண்டு இந்திய அரசியல் பிரபலங்கள் பலர் வாய்க்கு பூட்டுப்போட முடியாமல் வம்புவழக்குகளிலும், வலைதள ட்ரால்களிலும் சிக்கி விழித்தனர். மக்களிடம் மாட்டிக்கொண்டனர். அவ்வாறு இந்த ஆண்டு சிக்கலில் சிக்கிய சில இந்தியப் பிரபலங்களின் சர்ச்சை கருத்துகளை இத்தொகுப்பில் காணலாம்.
பிரக்யா சிங் தாகூர்;
சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தனது சர்ச்சை கருத்துகளால் பரபரப்பைக் கிளப்பத் தவறவில்லை. விமானத்தில் வாக்குவாதம் செய்தது, தன்னை எதிர்த்த மாணவர்களை தேசத்துரோகிகள் என்றது எனக் கடந்த ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய பிரக்யா, இந்த ஆண்டு லாக்டவுனில் சற்று அமைதி காத்து வந்தார். ஆனால், லாக்டவுன் முடிந்த கையோடு மீண்டும் தனது பழைய பாணிக்கே திரும்பினார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்திரிய மகா சபை என்ற அமைப்பின் கூட்டத்தில் சாதிய அமைப்புகளைப் பற்றிப் பேசிய பிரக்யா, "நீங்கள் ஒரு சத்திரியனை, சத்திரியன் என்றோ, ஒரு பிராமணரை பிராமணர் என்றோ அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை. அதேபோல ஒரு வைசியரை வைசியர் என்றால், அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஆனால் நீங்கள் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள். இது ஏன்? அறியாமை காரணமாக, அவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார். ஆண்டு முழுவதும் வாய் திறக்காமலிருந்த பிரக்யா, ஆண்டின் இறுதியில் முன்வைத்த இந்த கருத்து கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
கமல்நாத்;
பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இந்த ஆண்டு வாயை விட்டு வசமாக சிக்கிக்கொண்டனர். அதில் முக்கியமானவர் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத். 2020 மத்தியப்பிரதேச இடைத்தேர்தலின் போது தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், அவரது கருத்துகள் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் (ராகுல் காந்தி உட்பட) பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்நாத் பிடிவாதம் பிடித்தது, அவரது பேச்சைவிட அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவும், தேசிய மகளிர் ஆணையமும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை அணுகி இதுதொடர்பாக புகார் அளித்தன. அதன்பின்னர், தவறுதலாக அப்படி கூறிவிட்டதாக ஒப்புக்கொண்டார் கமல்நாத். இந்தச் சூழலில், அக்டோபர் 30, 2020 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கமல்நாத்தின் நட்சத்திர பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் கமல்நாத்.
யோகி ஆதித்யநாத்;
காவி உடையையும், காரசார பேச்சையும் தனது அடையாளமாகக் கொண்டவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். பேசும் மேடைகளிலெல்லாம் மதங்களைப் பற்றி இவர் ஆற்றும் உரைகள் பெரும்பாலான நேரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தத் தவறியதில்லை. இப்படிப்பட்ட இவர் இந்த ஆண்டும் ஏகப்பட்ட சர்ச்சை பேச்சுகளை அள்ளிவீசியுள்ளார். இதில், ஷாஹீன் பாக் போராட்டம் குறித்த பேட்டி ஒன்றில், "பிரிவினைக்குப் பின்னர் இங்கு தங்குவதைத் தேர்ந்தெடுத்த இஸ்லாமியர்களால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், கோழைகளைப் போல பதுங்கிக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளைப் போராட்டங்களுக்கு அனுப்புகிறார்கள்" எனத் தெரிவித்தது கடும் கண்டனங்களைப் பெற்றது.
அதற்கடுத்து, கதிஹாரில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "நாட்டின் பாதுகாப்பை மீற முயற்சிக்கும் எந்தவொரு ஊடுருவல்காரரும் தூக்கி எறியப்படுவார்கள்" என்றார். இதேபோல அண்மையில் மிகப்பெரிய விவாதத்திற்குள்ளான 'லவ் ஜிகாத்' குறித்துப் பேசுகையில், "அடையாளத்தை மறைத்து, எங்கள் சகோதரிகளின் மரியாதையுடன் விளையாடுவோரை நான் எச்சரிக்கிறேன். உங்கள் செயல்களை நீங்கள் சரிசெய்யாவிட்டால், உங்கள் ‘ராம் நாம் சத்யா’ (இந்து இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய கோஷம்) பயணம் தொடங்கும்" என்று பேசியது இந்த ஆண்டின் அவரது கடைசி சர்ச்சையாக அமைந்துள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா;
ஒரு மனிதன் சராசரியாக 66 நாட்கள் ஒரே செயலை தொடர்ந்து தினமும் செய்தால், அது அவனது அன்றாட வழக்கமாகிவிடும் என்கிறது அறிவியல். நாட்கள் கணக்கிற்கே இப்படி என்றால் வருடக்கணக்கில் ஒரு கட்சிக்காக ஓட்டுக் கேட்டுவிட்டு திடீரென வேறு கட்சிக்கு ஓட்டுக் கேட்க வேண்டுமென்றால் முடியுமா? அப்படி ஒரு நிலைதான் இந்த ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் பாஜகவுக்கு மாறினார். அதன்பின்னர், நவம்பர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டுவந்த பழக்கத்தில், பாஜக பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ்க்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டார் சிந்தியா. இருப்பினும் இதனைக் கூறியவுடன் சற்று சுதாரித்துக்கொண்ட அவர், “தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" எனத் திருத்தி கூறினார். இருப்பினும் அவரது இந்த பேச்சை வைத்து போதும்போதும் என்கிற அளவுக்கு மீம்களை உலாவவிட்டனர் இணையவாசிகள். இதுமட்டுமல்லாமல், அவரது பிரச்சாரத்தைக் கிண்டல் செய்யும் வகையில் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், “சிந்தியா, வரும் 3-ம் தேதி மத்தியப்பிரதேச மக்கள் நீங்கள் கூறியபடி காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள்” எனவும் கூறியது. சிந்தியாவின் இந்த பேச்சு சர்ச்சையாகவில்லை என்றாலும் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல கன்டென்ட் ஆனது.
சுவாமி சக்கரபாணி;
"கரோனா ஒரு வைரஸ் அல்ல, பாவப்பட்ட உயிரினங்களைப் பாதுகாக்கத் தோன்றிய அவதாரம். பிற உயிரினங்களை சாப்பிடுவோருக்கு மரணம் மற்றும் தண்டனை பற்றிய செய்தியை வழங்கவே கரோனா வந்திருக்கிறது" கரோனா வைரஸுக்கு சரியான தீர்வைக் காண சர்வதேச சுகாதார அமைப்புகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நேரத்தில், மேற்குறிப்பிட்ட இந்த கருத்தினை கூறினார் இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்கரபாணி. மேலும், இது இறைவன் நரசிம்மரின் அவதாரம் என்றும் கூறினார். இதுபோதாதென்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கரோனாவின் சிலை ஒன்றை உருவாக்கி, அதனிடம் மன்னிப்பு கோரவும் கூறிய அவர், சீன மக்கள் அசைவம் சாப்பிடமாட்டோம் என சத்தியம் செய்யவும் கேட்டுக்கொண்டார்.
அர்ஜுன் ராம் மேக்வால்;
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா குறித்த எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறது. ஆனால், அரசின் அறிவுரையை மத்திய அமைச்சரே கண்டுகொள்ளாமல் அப்பளம் ஒன்றை ப்ரொமோட் செய்தது இணையத்தில் அதிகம் கிண்டலுக்கு உள்ளானது.
'பாபிஜி அப்பளம்' என்ற அப்பள அறிமுக விழா ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "ஆத்மனிர்பர் பாரத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் 'பாபிஜி அப்பளம்' என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தது ப்ரோமோஷன்களில் புதுவிதம்.
வல்லபாய் கதிரியா;
மாடுகள், மாட்டுச் சிறுநீர், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை அண்மைக்காலங்களில் அதிகளவில் நம்மால் செய்திகளில் பார்த்திருக்க முடியும். கேன்சர் முதல் கரோனா வரை அனைத்திற்கும் மாட்டுச் சிறுநீர், மாட்டுச் சாணத்தில் மருந்து இருக்கிறது எனக் கூறிக்கொண்டு ஒரு கூட்டமே சுற்றியது. 'கரோனாவும் பசுமாடும்' என ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு கரோனாவுடன் மாட்டுச் சிறுநீர், மாட்டுச் சாணத்தை தொடர்புப்படுத்தி பலர் கருத்து கூறிவிட்டனர். இதில், மிகமுக்கியமானது, மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரீயக் காமதேனு ஆயோக் அமைப்பு கண்டுபிடித்த மாட்டுச்சாண சிப் தான்.
இந்த அமைப்பு நடத்திய 'காம்தேனு தீபாவளி அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சார நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கிவைத்த அதன் தலைவர் வல்லபாய் கதிரியா, செல்ஃபோன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் மாட்டுச்சாண சிப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். "மாட்டுச் சாணம் அனைவரையும் பாதுகாக்கும். கதிர்வீச்சு தடுப்பாற்றல் கொண்டது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கதிர்வீச்சு சிப். கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தக்கூடிய கதிர்வீச்சு சிப் இது. நோய்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும்" எனத் தெரிவித்து பலரையும் புருவமுயர்த்த வைத்தார். ஆனால், இந்த விவகாரம் பெரிதான நிலையில், 600 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அவ்வமைப்பின் தலைவருக்கு இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்களைக் கேட்டு கடிதமும் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபம் ஹஸ்ரா;
கரோனா பரவாமல் தடுக்க ஒருவொருக்கொருவர் கை கூட கொடுக்கக்கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துக்கொண்டிருந்த நேரத்தில், தனக்கு கரோனா வந்தால் மம்தா பானர்ஜியைக் கட்டியணைப்பேன் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார் பாஜகவின் தேசிய செயலரான அனுபம் ஹஸ்ரா. மேற்குவங்கத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "கரோனாவை விடப் பெரிய எதிரியான மம்தாவுடன் பா.ஜ.க தொண்டர்கள் போராடி வருகிறார்கள். ஒருவேளை எனக்கு கரோனா உறுதியானால், மம்தாவை நேரில் சந்தித்து அவரை கட்டி அணைப்பேன்" எனக் கூறி வம்பில் சிக்கினார். மம்தா குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக அனுபம் ஹஸ்ரா மீது சிலிகுரி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இந்தியப் பிரபலங்களைப் போல சர்வதேச அளவிலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் போல்சனாரோ உள்ளிட்டோர் தங்களது பல்வேறு சர்ச்சை கருத்துகளால் பலமுறை பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.