நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் 303 இடங்கள் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே நேரம் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க பழமையான கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
55 இடங்களில் வென்றால் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர் பெற முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜகவின் வளர்ச்சி, காங்கிரஸ் மீதான அதிருப்தி, ராகுலின் தலைமை என காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பலரும் பல காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மூத்த தலைவர்களின் வாரிசு திணிப்பு அரசியலே முக்கிய காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக செய்திகள் வெளியானது.
குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட தற்போது மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றது. அதுபோல மத்திய பிரதேசத்தில் 29 மக்களவை தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களில் நடந்த இந்த தேர்தலில் இப்படி தோல்வியை தழுவ முக்கிய காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரின் வாரிசு திணிப்பே காரணம் என ராகுல் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வாரிசு அரசியலை தாண்டி பலவும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்களாக விவாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தை தவிர நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் கூட்டணி விஷயத்தில் தவறான முடிவுகள், பிரச்சாரங்கள் வழியாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விடுத்து பாஜக மற்றும் மோடியின் வசை பாடும் கூட்டங்களாகவே அவற்றை நடத்தியது. மிக முக்கியமாக மோடி, அமித் ஷா, யோகி, ஸ்ம்ரிதி இரானி என பாஜக மாதிரியான நட்சத்திர பேச்சாளர்களை வைத்து மக்களை கவர தவறியது காங்கிரஸ் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்கள் ராகுலையும், ப்ரியங்காவையுமே பெரும்பாலும் நம்பி இருந்தன. இதுவும் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் பாஜகவின் முக்கிய பலமான அமித் ஷாவின் யோசனை, மோடியின் பிம்பம் போன்றவை காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியாகவே அமைந்தன. ராகுலின் பண்பாடு மிக்க மேற்கத்திய அரசியல் கலாச்சாரத்தை கடந்து இந்திய அரசியலில் வேரூன்றி நிற்க இன்னும் நிறைய விஷயங்களை காங்கிரஸ் கட்சி தகவமைக்க வேண்டியுள்ளது என்பது நிதர்சனமே.