Skip to main content

"பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு வருமா" - பாலியல் மருத்துவர் காமராஜ் பளீச் பதில்

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Dr Kamaraj

 

பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாலியல் மருத்துவர் காமராஜை நக்கீரன் சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

"பிரியாணியில் உள்ள பொருட்கள் அனைத்தும் தினசரி சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள்தான். அதில் கூடுதலாக எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.  பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு வரும், செவ்வாழை சாப்பிட்டால் நல்லது என்பது மாதிரியான நிறைய கருத்துகள் உலவிக்கொண்டு இருக்கின்றன. இவையனைத்தும் பெரும்பாலும் நம்பிக்கை அடிப்படையில்தான் உள்ளனவேயொழிய, ஆய்வுகள் அடிப்படையில் இல்லை. பிரியாணி அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்சனை வேண்டுமானால் வரலாம். அதற்குக்கூட பிரியாணியைக் குறை கூற முடியாது. நாம் அதிகமாக சாப்பிடுவதுதான் பிரச்சனை. மற்றபடி ஆண்மைக்குறைவுக்கும் குழந்தையின்மைக்கும் பிரியாணியோடு எந்தத் தொடர்பும் இல்லை. இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக பிரியாணி சாப்பிடுகிறார்கள். அப்படியென்றால் இந்நேரம் அவர்களது ஜனத்தொகை குறைந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி எதுவும் நடந்தது போல தெரியவில்லையே. 

 

இன்றைக்கு நாம் சாப்பிடும் பல்வேறு உணவு வகைகள் ஆண்மைக்குறைவு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியவை. பூச்சி தாக்குதலிருந்து காப்பதற்காக திராட்சைப் பழங்களை பூச்சி மருந்துகளில் மூழ்க வைத்து எடுக்கிறார்கள். அதில் பூச்சி மருந்துகள் காய்ந்து அப்படியே இருக்கும். திராட்சை மட்டுமல்ல பல பழங்கள் இன்றைக்கு அப்படித்தான் வருகின்றன. நெல்லில் தொடங்கி எல்லா விளைச்சலுக்கும் பூச்சிக்கொல்லி அடிக்கிறோம். கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மூன்று மாதங்கள் ஆறு மாதங்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனம் கலக்கின்றனர். இதன் மூலம் ஆண்மைக்குறைவும் குழந்தையின்மையும் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரியாணிக்கு அந்த மாதிரியான நிரூபணம் ஏதும் இல்லை". இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்தார்.