மே 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளிலும் மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் களம் தற்போது அனல் பறந்து வருகிறது. வாரிசு அரசியல் என்பது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதில் கர்நாடகா மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் இந்நாள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இளைய மகன் யதீந்திரா சித்தராமையா (காங்கிரஸ்) மைசூர் மாவட்டத்தில் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முதலில் முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா (பிஜேபி) போட்டியிடுவதாக இருந்தது. இந்தப் போட்டியால் வி.ஐ.பி தொகுதியானது வருணா. ஆனால், திடீரென்று தன் மகன் போட்டியிடவில்லையென்று கூறினார். சில காலமாக அங்கு வீடெல்லாம் எடுத்து தங்கி தேர்தல் வேலை பார்த்த விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியாகினர்.
அது போல முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ் கவுடாவின் மகன்கள் இருவரும் போட்டியிடுகின்றனர். மூத்த மகன் எச்.டி.ரெவன்னா, ஹாசன் மாவட்டத்தில் ஹோலெனராசிபுராவில் போட்டியிடுகிறார். எச்.டி. தேவகவுடாவின் இளைய மகன் குமாரசாமி ராமநகரா மற்றும் சென்னபத்தான்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். குமாரசாமி ஏற்கனவே முதல்வராக இருந்தவர்.
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான சரகோபா பங்காரப்பாவின் மூத்த மகனும் கன்னட நடிகருமான குமார் பங்காரப்பா சிவமோகா மாவட்டத்தில் சோரப்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனதாதள் சார்பில் போட்டியிடுவது யார் தெரியுமா? இவரது சகோதரர் மது பங்காரப்பா. இவர்தான் ஏற்கனவே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. இரண்டு பேருமே தங்கள் தந்தையின் பெருமையை நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள். மக்களுக்கு இப்பொழுது வேடிக்கையென்றாலும் வாக்குப்பதிவில் குழப்பம் ஆகப்போவது நிச்சயம்.
முன்னாள் கர்நாடக முதல்வர் ஜெ.ஹெச் படேலின் மகள் மஹீமா படேல் தாவணகிரி மாவட்டத்தில் சன்னகிரியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் அக்கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார். முன்னாள் கர்நாடகா முதலமைச்சர் செல்வராஜ் சிங் மகன் அஜய் சிங் காளபுரகி மாவட்டத்தில் ஜெவேரியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுகிறார் .
இத்தனை வாரிசுகள் தேர்தலில் போட்டியிடுவது நமக்கொன்றும் புதிதில்லையென்றாலும் இதையெல்லாம் பார்க்கும்போது இன்னொன்று உறுதியாகிறது. அரசியல் என்பது சமூக செயல்பாடு என்ற நிலையிலிருந்து குடும்ப தொழில் என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.