கடந்த வாரம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் 'நீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு' நடத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள 'உலகத் தமிழ் அமைப்பு', தமிழ்நாடு - புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து ஒருங்கிணைத்த இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் இயக்குனர் கௌதமன் பங்காற்றியுள்ளார். "நீட் என்பது மருத்துவக் கல்வி குறித்த தமிழக மாணவர்களின் சிக்கல் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் எதிர்கால நலன், கல்வி நலன் மீதான தாக்குதல். இந்திய கூட்டாட்சி அமைப்பில் 1976 வரை மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, கல்விக் கொள்கைகள், அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு அபகரித்துள்ளது." என்று 'நீட்'டை பற்றிய விளக்கத்தை அந்த அழைப்பிதழில் கொடுத்திருந்தனர்.
இந்த மாநாட்டின் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் சமீப காலமாக மேடைகளில் எதிரும் புதிருமாக, முன்னும் பின்னுமாக இருக்கும், வெளிப்படையாகத் தாக்கிக் கொண்ட தலைவர்கள் உள்பட பல தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுதான். அதிமுக மற்றும் நீட் ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும், சிறிய பெரிய அமைப்புகளும் இதில் பங்குபெற்றனர். வைகோவும், சீமானும் தற்போது எந்த மேடையில் ஏறினாலும் யார் தமிழர்? யார் தமிழீழத்துக்கு அதிக தொண்டாற்றியது என்று எதிரும் புதிருமாக இருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சி நிரலில் இருவரின் பெயரும் இருந்தது. அதேபோல, திருமுருகன் காந்திக்கும் சீமானுக்கும் பெரும்பாலான கொள்கைகள் ஒன்றாக இருந்த போதிலும் சில விரிசல்கள் வந்து, அதன் பின்னர் மேடையில் தாக்கிக்கொண்டனர். அதற்குப் பின் அவர்கள் இருவரும் ஒரே மேடையில் கலந்துகொள்ளவில்லை. அதுவும் இந்த மேடையில் நடந்தது.
திருமுருகன் காந்தி பேசும் போது அதே மேடையிலிருந்த சீமான் அவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தார். திமுகவிலிருந்து திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகளிலிருந்து ஆளூர் ஷாநவாஸ், காங்கிரசிலிருந்து செல்வப்பெருந்தகை, திராவிடர் இயக்கதைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, பாமக வழக்கறிஞர் பாலு, நடிகர் சத்யராஜ், மஜமக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி என அரசியல் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து பெரிய கட்சிகளும் அமைப்புகளும் நீட் அநீதிக்கெதிரான இந்த மாநாட்டில் கலந்துகொண்டது, தமிழக மாநில அரசியலின் நோக்க வலிமையையும் இதை ஏற்பாடு செய்த உலகத் தமிழ் அமைப்பின் மக்கள் நல ஈடுபாட்டையும் காட்டுகிறது. இந்த மாநாட்டில் தமிழத்தின் நீட் எதிர்ப்புக் குறியீடாக மாணவி அனிதாவின் படம் இருந்தது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, "போராட்டக்களத்தில் உயிர் போகட்டும், தாமாக மாய்த்துக்கொள்ள வேண்டாம்" என்று தற்கொலையை தவிர்க்கும்படி அறிவுறுத்தினார். சென்ற மாதம் மதிமுக தொண்டர் ரவி, சில நாட்களுக்கு முன்பு வைகோவின் நெருங்கிய உறவினர் சரவண சுரேஷ் என நியூட்ரினோவை எதிர்த்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தீக்குளித்த இரண்டு உயிர்களின் பாதிப்பு அவரிடமிருந்து முற்றிலுமாக அகலவில்லை.
மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இந்த விழாவில் பேசும்போது, " இந்த நீட் என்பது அதிகார வர்க்கம், சாதாரண மனிதனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த பயன்படுத்தும் கருவியாக இருக்கிறது", என்று குறிப்பிட்டார். சீமான்," இது மற்ற மாநிலங்களை போல அல்ல, யோசித்து போராடக் கூடிய கூட்டம் இது", என்றார். தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "மீண்டும் மெரினா போராட்டம் போன்ற ஒரு புரட்சி வரும்", என்றனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, " சீமான் நல்லதை சொன்னால் திமுக பாராட்டும்", என்றார். கவிஞர் வைரமுத்து, "அனிதா ஒரு நவீன காலத்து தெய்வம் " என்றார். இவ்வாறு மதியம் தொடங்கிய நிகழ்ச்சி, இரவு பத்து மணிவரை இரு அமர்வுகளாக நடந்தது. இந்த மாநாட்டில் அரசியல்வாதிகள் மட்டும் பேசவில்லை, மாணவர்களும், மருத்துவர்களும் என பல தரப்பு சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களின் குரல்களும் நீட்டுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது.
தமிழகத்தில் பல வேறுபாடுகள் வெறுப்புகளோடு இருந்தவர்களை தமிழர் நலனுக்காக ஒன்றாக நிற்க வைத்திருப்பது உலகத் தமிழ் அமைப்பு செய்திருக்கும் சாதனைதான். அந்த வகையில் இந்த மாநாடு ஒரு வெற்றிகரமான மாநாடாகத்தான் பார்க்கப்படுகிறது. அதே நேரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் பலவிதங்களிலும் கட்சிகளுக்கு முக்கியமாக இருப்பதால்தான் இத்தனை கட்சிகள் இங்கு ஒன்று கூடினர் என்றும் மற்றபடி அவர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லையென்றும் சிலர் பேசிக்கொண்டனர். இங்கு நிலை இப்படியிருந்தாலும் ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட், ஸ்டெர்லைட், காவிரி என தமிழர்களின் பிரச்சனைகளுக்கு உலகத்தமிழர்கள் ஒன்று கூடி குரல் கொடுப்பது மகிழ்ச்சியே.