Skip to main content

சென்னையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! -காவல்துறை கெடுபிடி!  

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

சென்னை கொத்தவால்சாவடியில்தான் அரிசி, ரவை, மைதா, கோதுமை, பருப்பு, தானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையிலான உணவு மற்றும் மளிகை பொருட்களின் மொத்த வியாபார கடைகள் இருக்கின்றன. இங்கிருந்துதான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள மொத்த வியாபார கடைகளுக்கும், சில்லரை கடைகளுக்கும்  மளிகை பொருட்கள் சென்று வருகின்றன. 


இந்த நிலையில், திடீரென்று இன்று (23.4.2020) இரவு 7 மணியிலிருந்து அத்யாவசிய உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களை  நகரத்துக்குள் அனுமதிக்காமலும்  கொத்தவால்சாவடி மொத்த வியாபார கடைகளை இழுத்து மூடுமாறும் சென்னை காவல்துறை ஏகத்துக்கும் கெடுபிடி காட்டி வருவதால் திகைத்து நிற்கிறார்கள் வியாபாரிகள். இதனால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சூழ்ந்துள்ளது!     
                 
  kottivakkam murugan

  
இது குறித்து நம்மிடம் பேசிய தென்சென்னை கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் மாநில செயலாளருமான கொட்டிவாக்கம் முருகன், “ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் உணவு பொருட்கள் சப்ளைக்கு தடை கிடையாது.  அத்யாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுக்காமலும் அவைகள் தடையின்றி செல்லவும் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துவக்கத்திலேயே தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 
 

nakkheeran app

 

அதற்கேற்ப சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள உணவு மற்றும் மளிகை பொருட்களின் மொத்த வியாபாரிகள், தினமும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிக்குள் பொருட்களை மாவட்டத்திலுள்ள அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவிட வேண்டும் என்கிற தகவலும் அரசு தரப்பிலிருந்து  மொத்த வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலுள்ள மொத்த வியாபார கடைக்காரர்களிடமிருந்தும், சில்லரை கடைக்காரர்களிடமிருந்தும் ஆர்டர்கள் பெறப்பட்டன!  
                    
பெறப்படும் ஆர்டர்களின்படி, கொத்தவால்சாவடியில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பொருட்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு 7 மணிக்கெல்லாம் லாரிகள் புறப்பட்டு சென்றபோது சென்னையில் பல்வேறு பகுதிகளில் லாரிகளை மடக்கி, மேற்கொண்டு போகாமல் தடுத்து நிறுத்தி வைக்கிறது காவல்துறை. 
                        
அத்யாவசியப் பொருட்களை ஏன் தடுக்கிறீர்கள் என லாரி ட்ரைவர்கள் கேட்டதற்கு, கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த வியாபார கடைகளை இழுத்து மூட வேண்டும் எனவும்,  அங்கிருந்து வரும் லாரிகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் மாநகராட்சி தரப்பிலிருந்து எங்களுக்கு உத்தரவு. அதனால், தடுத்து நிறுத்துகிறோம் என போலீசார் தெரிவிக்கிறார்கள். இதனால் மொத்த வியாபாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் எடுக்கப்பட்டுள்ள ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. 
                 
அந்த ஆர்டர்படி பொருட்களை மொத்த வியாபாரிகள் சப்ளை செய்தால்தான் அடுத்து வரும் 10 நாட்களுக்கு சென்னை மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும். இல்லையெனில், பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. திடீரென இன்றி இரவு வாகனங்களை தடுத்து நிறுத்தியிருப்பதால் சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு பொருட்கள் போய்ச்சேர்வதிலும் தடை ஏற்பட்டிருக்கிறது. இதனை அனுமதிக்காமல் போனால் நாளை மறுநாளிலிருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலையும் தாறுமாறாக அதிகரிக்கும் அபாயமும் உண்டு! இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.சிடம் முறையிடுவதற்காக  முயற்சித்தபோது, அவரை தொடர்புகொள்ளவே முடியவில்லை” என்கிறார் கொட்டிவாக்கம் முருகன்.