"வீசும் காத்தும், சில்லுன்னு மழையும் சும்மாவே வருது, ஆனால் செலவழிக்க காசு சும்மா வருமா?" என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில் பாடல் வடிவிலான புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது 'லலிதா' ஜுவல்லரி. தொலைக்காட்சி விளம்பரங்களை தொடர்ந்து, இந்தப் பாடல் மூலம் அனிமேஷன் வடிவிலும் மக்களைக் கவர்ந்துள்ளார் 'லலிதா' ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார்.
ஆண்டாண்டுகாலமாக விளையாட்டுப் பிரபலங்கள், நடிகர்களைப் பயன்படுத்தி தங்களது நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திவந்த வணிக நிறுவனங்களின் ஸ்டீரியோடைப், 90 -களின் மத்தியில் மெல்ல மாறத்தொடங்கியது. எம்.டி.எச் மசாலா, வசந்த் அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், தாங்களே தொலைக்காட்சி திரையில் தோன்றி தங்களது நிறுவனத் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த துவங்கினர். 90 -களில் தொடங்கிய இந்த ட்ரெண்ட், அண்மைக் காலங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்களும், பிரபலங்கள் மற்றும் மாடல்களை ஓரங்கட்டிவிட்டு தங்களது நிறுவனங்களுக்காக தாங்களே திரையில் தோன்றினர். இவ்வகை விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பிராண்ட்களில் மிக முக்கியமானது 'லலிதா' ஜுவல்லரி.
தென்னிந்தியா முழுவதும் தங்க நகைகளுக்கான ஷோரூம்களை கொண்ட 'லலிதா' ஜுவல்லரியின் விளம்பரங்கள், மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு, திரையில் தோன்றும் அதன் உரிமையாளர் கிரண்குமார் மற்றும் மக்களை சிந்திக்கவைக்கும் வகையிலான கேள்விகளை எழுப்பும் விளம்பர வடிவமைப்பு ஆகியவை முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. பொதுவாகவே, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அதன் விளம்பரத்தில் தோன்றும்போது, அது ஒரு பிராண்ட் மீதான நம்பகத்தன்மையை உயர்த்துவது இயல்பு. அதேபோல சந்தையில் தாங்கள் சார்ந்த துறைமீதான பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கம் மற்றும் தயாரிப்புகள் குறித்து சிந்திக்கவைக்கும் வகையிலான விளம்பர வடிவமைப்பு மக்கள் மத்தியில் அதிகம் சென்றடையும். அந்தவகையில் தற்போதைய 'இந்த காசு யாருக்கும் சும்மாதான் வருதா..?' என்ற பாடலும் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.