ஒரு கதை தனக்கு நீதி வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு நீதி கிடைக்கவிடாமல் சம்மந்தப்பட்டவர்கள் இழுத்தடித்து வருகிறார்கள்.
அது பற்றிய விபரம் இதோ… நக்கீரன் குழும இதழான 'இனிய உதயம்' இதழில், கடந்த 1996 ஏப்ரல் மாதம் ‘ஜூகிபா’ என்ற 'ரொபாட்' பற்றிய சிறுகதை வெளியானது. இதே சிறுகதை 2007 ஆம் ஆண்டு, சாருபிரபா பப்ளிகேசன் வெளியிட்ட 'திக் திக் தீபிகா' என்ற நூலிலும் வெளியானது. இந்த நிலையில் 2010-ல் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ’எந்திரன்’ படம் வெளியானது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், இது ‘ஜூகிபா' கதையின் திரை வடிவம் என்று சொல்ல, அதன் பின் இந்தக் கதையை எழுதிய எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்துக்குப் போனார். ஆனால், இயக்குநர் தரப்போ வாய்தா மேல் வாய்தாவாக வாங்கி வழக்கை இழுத்தடிப்பதிலேயே இருந்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஜூகிபா கதைக்கும் எந்திரன் திரைப்படத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஏற்றுக்கொண்டு, சங்கர் மீது வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் பிறகும் கூட, சங்கர் தரப்பு வீராப்பை விட்டுக்கொடுக்காமல் உச்சநீதிமன்றத்தில், ஹைகோர்ட் தீர்ப்பை நிறுத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் ஜூகிபா கதையின் 10 ஆண்டு போராட்டம் முடிவு காணாமல் தொடர்கிறது.
சுப்ரீம் கோர்ட்டிலாவது அதற்கு நீதி கிடைக்குமா?
96-ல் வெளியான ஜூகிபா சிறுகதை…
ஜூகிபா
எனது நான்கு வருடங்களை செலவிட்டு உழைத்ததில்.. இதோ என் எதிரே உயிர்த்து நிற்கிறது ஜூகிபா!
இது மானுட சரித்திரத்தின் உச்சபட்ச சாதனை. மூளையைக் கசக்கிக் கசக்கி நான் உருவாக்கிய கம்யூட்டர் பார்முலாக்களுக்கு கண் முன் பலன். ஜூகிபாவிற்காகக் தலையில் நிறைய முடி உதிர்த்திருக்கிறேன். உணவு உறக்கத்தை தியாகம் செய்திருக்கிறேன். என் ப்ரியமான காதல் பொழுதுகளைக் கூட வருஷக் கணக்கில் ஒத்தி வைத்திருக்கிறேன். என் கன்னப் பிரதேசத்து ரோமப் பயிரை வழித்தெறியக் கூட அவகாசமின்றி நான் நடத்திய விஞ்ஞான வேள்விக்கு இதோ கம்ப்யூட்டர் வரமாய் ஜூகிபா!
*
ஜூகிபா, ஒரு அதி அற்புத கம்யூட்டர் ரோபாட்.
உருளும் நியான் விழிகளால் பார்க்கும் காட்சிகளை படம் படமாய் தனக்குள் பதிவு செய்துகொள்ளும். எலக்ட்ரானிக் சிந்தசைசர் மூலம், கேட்கும் கேள்விகளுக்கு டக்டக்கென மெட்டாலிக் வாய்ஸில் பதில் சொல்லும். ஆதாம் காலம் தொடங்கி, இந்த நிமிஷத்து உலகம் வரை அத்தனைத் தகவல்களையும் தன் மெமரிக் கிடங்கில் சேமித்து வைத்திருக்கும். அதோடு, எந்திர மூட்டசைத்து அதிராமல் நடக்கும். தன் உலோகக் கைகளைக் கண்டபடி, கண்ட திசைகளிலும் சுழற்றி, கொடுத்த வேலையைக் கச்சிதமாய்ச் செய்யும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சூழலைப் புரிந்துகொள்ளும் உணர்வுத் திறனும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இயங்கும் சுய செயல்திறனும் ஜூகிபாவிற்குப் புகட்டப்பட்டிருக்கிறது. என் ஜூகிபா ஒரு மனிதன். ஏறத்தாழ 95 விழுக்காட்டு மனிதன். பிள்ளைப் பேறு என்ற சங்கதிக்கும் ஏற்பாடு செய்துவிட்டால் நூற்றுக்கு நூறு மனிதனாய் மாறிவிடும்.
பார்வைக்கு ஒரு மனிதனைப் போலவே புறத்தோற்றத்தையும் விஷேச ஃபைபர் கொண்டு வடிவமைத்துவிட்டேன். இந்த ஜூகிபா எனக்கு வைரப் புதையல்!
இனி அரசாங்கங்கள் என் அறிவுக்கு விலைபேசும். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், விஞ்ஞான கேந்திரங்கள், பல்கலைக் கழகங்கள் என்னைத் தேடிவந்து விருதுகளையும் பட்டங்களையும் வழங்கும். இந்த வருட நோபல் பரிசு கூட எந்த சிபாரிசும் இன்றி என் விலாசத்தை விசாரிக்கும்.
சிரிக்க - அழ - மிரட்ட - நெகிழ என சகலத்தையும் என் ஜூகிபாற்குப் போதித்து விட்டேன். இதோ ஜூகிபா என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறது.
"என்ன ஜூகிபா, எப்படி இருக்கிறாய்?"
"உங்களால் இந்த நிமிடத்தில் மிகத் துல்லியமாய் நலத்தோடு இருக்கிறேன்"
‘நாளை நான் கூட்ட இருக்கும் கான்பரன்ஸில் உன் சகல சித்துக்களையும் நீ நடத்திக்காட்டி, வந்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி செய்யவேண்டும்.’
”உத்தரவு”
“சரி ஜூகிபா, இன்னும் சற்று நேரத்தில் ஒரு நபரை உனக்கு அறிமுகப்படுத்துவேன். இனிமையாக நடந்துகொள். என்ன?”
“உத்தரவு”
“நான் அழைக்கும் வரை கம்யூட்டர் ஹாலில் ஓய்வெடு”
“சரி பாஸ், என்ற ஜூகிபா மெதுநடைபோட்டு வெளியேறியது.
வரப்போகும் என் காதல் தேவதை ஜோசஃபின், இந்த ஜூகிபாவைப் பார்த்தால் ஆனந்தமாய் அதிர்வாள்.
"இது எப்படி சாத்தியம் ராபின்? யூ ஆர் கிரேட். வெரி கிரேட்" என கட்டிக்கொண்டு தாடிக் கன்னத்தைக் கன்னத்தால் உரசுவாள். சந்தோசம் கசிவாள். வரவுக்குக் காத்திருந்தேன்.
*
டீ சர்ட் மிடியில் இளமை அதிர அழகுப்புயலாய் ஜோசஃபின்...
லிஃப்டுக்குக் கூட காத்திருக்கும் பொறுமை இன்றி,
எட்டு மாடியையும் ஏறிக் கடந்திருக்கிறாள் என்பதை அவை சொல்லாமல் சொல்லின.
“என்ன திடீர் அழைப்பு ராபின்.?” - கீ போர்டை வாயில் வைத்திருப்பவளைப் போல் சங்கீதமாய்க் கேட்டாள்.
” நீ மிஸஸ் ராபின் ஆகுற நாள் வந்திடுச்சி”
“ஏய், என்ன சொல்றே?”
சந்தோசமாய்க் கூவிய ஜோசஃபினை மெல்ல அணைத்து...என்னோட ஆரய்ச்சி ஜெயிச்ச உடனே மேரேஜ்னு சொன்னேன்ல”
”ஆமா”
“நான் ஜெயிச்சிட்டேன்”
“ நிஜமாவா?”
“இதோ நீயே பார். நான் உருவாக்கிய சாதனையைப் பார்”
சொன்ன நான், ஜூகிபா என்று கூப்பிட்டேன்.
அடுத்த நொடியில், கம்யூட்டர் ஹாலில் இருந்து மெல்ல நடந்து வந்தது அது.
ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றவளை. ஜுகிபா தன் நியான் விழிகளை உருட்டி உருட்டிப் பார்க்க..
”ஜூகிபா, இது ஜோசஃபின். என் காதலி”- என அறிமுகப்படுத்தினேன்.
மெல்ல நடந்து ஜோசஃபின் அருகே வந்த ஜூகிபா, கை குலுக்கத் தன் உலோகக் கையை நீட்ட- ஜோசஃபின் மிரண்டுபோய்ப் பின் வாங்கினாள்.
“பயப்படாதே ஜோசஃபின். இந்த ஜூகிபா உன்னை ஒன்றும் செய்யாது. இது ஏறத்தாழ ஒரு மனுஷன்”
நான் சொன்னதும் மிரட்சி நீங்காமல் கையைத் தயக்கமாய் நீட்டினாள்.
கையை மெல்லப் பற்றி குலுக்கிய ஜூகிபா,
‘ரொம்ப சாஃப்ட்” என்றது குறும்பாக.
அதைக் கேட்டு ஜோசபின் களுக்கெனச் சிரித்தாள்.
”உங்க சிரிப்பு இன்னும் அற்புதம். என் கவிதைப் பகுதியிலிருந்து சில வர்த்தைகளைப் பொறுக்கித்தான் உங்களைப் பாராட்டனும்’
ஜூகிபா, பேசப் பேச ஜோசஃபின் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமானாள்.
”ஜோசஃபின்... நிங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அழகை அனலிசிஸ் பண்ணினதுல, நீங்க பூவுக்குப் பிறந்த பூவோன்னு நினைக்கத் தோணுது”
ஜுகிபா, மேலும் மேலும் பேசிக்கொண்டே போக, இடைமறித்தேன்.
’என்ன ஜூகிபா, விட்டால் நீயே ஜோசஃபினைக் காதலிப்பாய் போலிருக்கிறதே”
ஒரு நிமிடம் மெளனமாய் நின்ற ஜூகிபா,
”பாஸ், அதுதான் சரியான வார்த்தை. நான், ஜோசபினைக் காதலிக்கிறேன். ஐ டூமச்.. லவ் ஹர் பியூட்டி”
ஜூகிபாவின் வரம்புமீறிய வார்த்தைகள் எரிச்சலை உண்டாக்க, சற்று கோபமாகவே சொன்னேன்.
“அளந்து பேசு ஜூகிபா, நீ ஒரு ரோபாட். ஜோசஃபின் என்னைப் போல் சதையும் ரத்தமும் உள்ள மனுஷி.”
“நோ.. எனக்கு ஜோசஃபினைப் பார்த்தால் கிளுகிளுன்னு இருக்கு. ஜோசஃபின் இல்லாட்டி நான் இல்லை.”
’முட்டாள் ரோபாட்டே. ஜோசஃபினைப் பத்தி
நீ இனிமே பேசக்கூடாது. உடனே உன் ரூமுக்குப் போ.. யூ கெட் லாஸ்ட்”
அதட்டினேன். ஜோசஃபின் விக்கித்துப் போய் நின்றாள்.
ஜூகிபாவின் நியான் விழிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த செயற்கைக் கண்ணீர் வழிந்தது.
”ஜோசபின் இல்லாமல் நான் இல்லை... நான் இருக்கமாட்டேன்.. ”சொன்ன ஜூகிபா, நான் சற்றும் எதிர்பார்க்காத அந்த நொடியில் கண்ணாடிச் சன்னல்களை உடைத்துக் கொண்டு, வெளியே குதிக்க.. நான் ஸ்தம்பித்தேன்.