திரிபுரா மாநிலத்தில் 27 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சி மாற்றப்பட்ட பிறகு, அந்த மாநிலம் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்தனத்திலும், மூடநம்பிக்கையிலும் முன்னேறி இருக்கிறது. முதல்வரும், அமைச்சர்களும் பொறுப்பற்ற வகையில் பேட்டியளிப்பதால் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாஜகவினர் தங்கள் விருப்பத்துக்கு ஒத்துழைக்காத பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.
திரிபுரா மாநிலத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி 11 வயது சிறுவன் கொல்லப்பட்டான். இதுகுறித்து சமூகவலைத் தளங்களில் தகவல்கள் பரவின. அந்தச் சிறுவனுடைய கிட்னிகள் திருடப்பட்டிருப்பாதக சில தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி பேசிய மாநில சட்ட அமைச்சர், அந்த சிறுவனின் கிட்னியை சர்வதேச அளவிலான ஒரு கிட்னி திருட்டுக் கும்பல் திருடியிருக்கலாம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்திருக்கிறார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. குழந்தைகளை திருடுகிறவர்கள் என்ற சந்தேகத்தில் மாநில முழுவதும் பல இடங்களில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மூவர் பலியாகினர். இதையடுத்து திரிபுராவில் இணை சேவை ரத்துசெய்யப்ட்டது. மூன்று நாட்கள் இணைய சேவை ரத்து செய்யப்பட்டன.
இதுபுறமிருக்க, திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பழங்குடியினர் ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற சந்தானு போவ்மில்க் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். அதன்பிறகு, கடந்த ஜூன் 18 ஆம் தேதி எண்ணெய் திருடும் கும்பலைப் பற்றி செய்தி வெளியிட்ட தேப்நாத் என்ற பத்திரிகையாளரை அந்தக் கும்பல் கத்தியால் தாக்கி காயப்படுத்தியது.
கடந்த சனிக்கிழமை திரிபுராவிலிருந்து வெளிவரும் தேசர்கதா என்ற பத்திரிகையின் செய்தியாளர் தர் மீது 20 பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். ஃபோகஸ் திரிபுரா தொலைக்காட்சி சேனல் செய்தியாளர் தாஸ் என்பவர் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சம்பவங்களிலும் பாஜகவினர் மீதே குற்றம்சாட்டப்பட்டது.
இந்த இருவரில் தேசர்கதா பத்திரிகையின் ஆசிரியர் தர், ஒரு கோழிப் பண்ணையை பெற்றுத்தர உதவவில்லை என்பதால் 20க்கும் அதிகமான பாஜகவினரால் தாக்கப்பட்டதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் சமிர் பால் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் தூண்களை அடித்து நொறுக்கி தங்களின் அட்டூழியங்களை பாஜகவினர் தொடர்வதாகவும், மக்களை அச்சுறுத்தியும் திசைதிருப்பியும் பாஜகவினர் கார்ப்பரேட்டுகளுக்கு காரியம் செய்துகொடுப்பதாகவும் இடதுமுன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.