எம்.ஜி.ஆரைப் போல் ஆக முடியாது: ரஜினி அறிவிப்பு பற்றி வைகைச்செல்வன்

தான் அரசியலுக்கு வருவதாகவும், சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஓராண்டாக தமிழகத்திற்கு தலைகுனிவு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்திருக்கிறார். 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருகிறார். அவர் எம்.ஜி.ஆர். ஆவாரா, சிவாஜியாக ஆவாரா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். எம்.ஜி.ஆரைப்போல் அவரால் ஆக முடியாது.

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி இன்றவுளம் நிற்கிறது. நூறு ஆண்டுகளை கடந்தும் அஇஅதிமுக நிற்கும். ஆகவே அவர் சிவாஜியாக ஆவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அஇஅதிமுக காணாமல் போய்விடும் என்று பலபேர் கனவு கண்டார்கள். ஆனால் அந்த கனவு சுக்குநூறாக உடைந்துவிட்டது. தொடர்ந்து இந்த ஆடசி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. எப்படியாவது கலைந்துவிட வேண்டும், அகற்றிவிட வேண்டும் என்று பலபேர் பகல் கனவு காண்கிறார்கள். அந்த பட்டியலில் ரஜினிகாந்த்தும் தற்போது சேர்ந்துவிட்டார். மக்கள் பணி ஆற்றும் அதிமுக அரசை கலைக்க முடியாது என்பது மட்டுமல்ல, மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு என்னென்றும் உண்டு. இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்