Skip to main content

“ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது..? மோடி கண்ணில் பயத்தைப் பார்த்தேன்” - ராகுல் ஆவேசம்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

rahul gandhi press meet bjp modi and adani

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. 

 

அதானி குழுமம் தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால்தான் பிரச்சனை தொடங்கியது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணர்கிறேன். ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன்வைக்கிறேன். ஆனால், பாஜக அமைச்சர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.  பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும முதலீடுகள் நடைபெற்றுள்ளன. அந்த முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அதானி குழுமத்தில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது? மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன்.

 

முதலில் சபாநாயகருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், என்னைப் பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அதைக் குறித்து எனது கருத்தை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் வைக்க எனக்கு உரிமை உள்ளது. அதற்கு அனுமதியளியுங்கள் என்றேன். ஆனால், எனது முதல் கடிதத்திற்கு எந்தப் பதிலும் இல்லை. இரண்டாவதாக ஒரு கடிதம் எழுதினேன். அதில், கூடுதலான தகவல்களையும், யார் சொன்னார்கள் என்பதையும், என்ன சொன்னார்கள் என்பதனையும் அவர்களின் பெயர்களுடன் குறிப்பிட்டேன். அதற்குப் பதில் இல்லை. மூன்றாவதாக நான் சபாநாயகரின் அறைக்கே நேரடியாகச் சென்று, “நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு என்ன நடக்கிறது. நீங்கள் ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய இடத்தில் இருப்பவர். ஏன் எனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை” என்றேன். அதற்கு சபாநாயகர் சிரித்துவிட்டு, “என்னால் அதைச் செய்ய முடியாது” என்றார்.

 

பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நான் இந்தியாவை எந்த இடத்திலும் இழிவுபடுத்திப் பேசவில்லை; பாஜகவினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டினைச் சொல்கின்றனர். மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் நபராகவே இருக்கிறேன். கைதுக்கு ஒரு போதும் அஞ்சமாட்டேன். 

 

அதானி குறித்து என்னுடைய அடுத்த நாடாளுமன்றப் பேச்சைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்த அச்சத்தை நான் அவரது கண்களில் பார்த்துள்ளேன். அதன் காரணமாக முதலில் என் பேச்சுக்கு தடங்கல் ஏற்படுத்தினார்கள். பிறகு தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். நான் வெறும் உண்மையை மட்டுமே பேசுவேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன். அவர்கள் என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நாடாளுமன்றத்தின் உள்ளேயோ வெளியேயோ அதைப் பற்றி கவலைப்படாமல் நான் எனது பணிகளைத் தொடர்ந்து செய்வேன். நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன். 

 

 

சார்ந்த செய்திகள்