கரோனா மருந்துக் கலவையில் கற்பூரம் இருப்பதால், கற்பூரத்துடன் பிரார்த்தனை செய்வதோ அல்லது பச்சை கற்பூரம் சேர்த்து சர்க்கரைப்பொங்கல் செய்து சாப்பிடுவதோ செய்யலாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை கரோனாவை குணப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்தும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை. அதில், "சார்ஸ் கோவி-2 / கோவிட்19-க்கான மருந்துகள் பற்றிப் பாருங்கள். அதில் இருக்கும் கலவையில் கற்பூரமும் உள்ளது.
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் கற்பூரம் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ப்ளேக், இன்ஃப்ளூயன்ஸா (குளிர் காய்ச்சல்) போன்ற நோய்தொற்று பரவியபோது கற்பூரம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே, கற்பூரம் பயன்படுத்தி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யுங்கள்.
ஒரு எச்சரிக்கை, இந்த மருந்துகள் பரிசோதனைக் கூடங்களில் ஆராய்ச்சி நிலையில் இருப்பவை. இவற்றை அதிகாரிகள் அங்கீகரிக்கும்வரை நேரடியாகச் சாப்பிடக்கூடாது. நமது பாரம்பரிய மருந்தான கற்பூரம், சிகிச்சை இல்லாத தொற்றுக்கு மருந்தாக மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதில் பெருமை" என தெரிவித்துள்ளார்.