Skip to main content

ஆங்கிலேயர் அனுமதித்த சங்கமும், காங்கிரஸ் கட்சியும்!

Published on 07/09/2017 | Edited on 14/09/2017


2014 மார்ச் மாத இறுதியில்  நாட்டின் மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,627 ஆக இருந்தது. அதற்கு பிறகும் 239 புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. இந்த புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தேர்தலில் தனிச்சின்னத்துடன் போட்டியிடுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று இன்றைய இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மன்னர்கள் காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் பல்வேறு சங்கங்களும் இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற முதல் சங்கம், முதல் கட்சி பிரிட்டிஷார் காலத்தில்தான் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் தமிழ் சங்கம், பவுத்த, சமண சங்கங்கள் தோன்றியதைப் போல, மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவினார்.  ஆத்மராம் பாண்டுராங் என்பவர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் "விசிஷ்டாத்வைதம்' என்ற கொள்கையை போதித்தார். சங்கரர் "அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார். மத்வாச்சாரியார் "துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார்.

மெய்கண்டார் இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். சைதன்யர் ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தார். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர் கபீர்தாசர், அல்லாவும், இராமானுஜரும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். தயானந்த சரஸ்வதி "ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தார். இராஜாராம் மோகன்ராய் "பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார்.

குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார். பண்டித ரமாபாய் "ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார். முத்துலெட்சுமி ரெட்டி சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றினார். ஜோதிபாபூலே "சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். கந்துகுரி வீரேசலிங்கம் பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தினார். ஸ்ரீநாராயண குரு "ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார். இராமலிங்கர் "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். விவேகானந்தர் "ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார்.

இந்த அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் இவை தோன்றிய காலத்தில் இருந்த அரசுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கலாம் அல்லது எதிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அமைப்புகளும் இயக்கங்களும் அந்தந்த காலத்தில் நிலவிய சமூக அமைப்பில் மக்களை வழிப்படுத்த தேவைப்பட்டன.

அதுபோல பிரிட்டிஷ் ஆட்சியில் சங்கங்கள், கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டனவா என்பது குறித்து பார்க்கலாம். ஏனென்றால் பிரிட்டன்தானே நமக்கு நவீன அரசு அமைப்பை சொல்லிக் கொடுத்தது.

1858 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி, இங்கிலாந்து ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டத்தில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தியர்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும் என்று விக்டோரியா ராணியின் அறிக்கையும் உறுதி அளித்தது.

இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை வழங்க 'இந்தியா கவுன்சில்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. வெளியுறவுச் செயலாளர் பிரிட்டிஷ் அமைச்சரவையிலும் உறுப்பினராக இருப்பார். இந்தியா கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.



இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை வைசிராய் எனப்படும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் கானிங் பிரபு.

ஆனாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களை தொடர்ந்து பாரபட்சமாக நடத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசாங்கத்தின் குறைகளை பிரச்சாரம் செய்யவும், குறைகளை அரசுக்கு சொல்லவும் வேண்டிய அவசியம் இருந்தது.

சுரேந்திரநாத் பானர்ஜி என்பவர் பிரிட்டிஷ் இந்திய அரசை எதிர்க்க தீர்மானித்தார். மக்கள் அரசியல் உரிமைகளைப் பெறவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார். ஆனந்த மோகன் போஸ் என்பவருடன் சேர்ந்து, 1876ல ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இந்திய தேசிய சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். இதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் தொடர்பான சங்கமாக கருதப்படுகிறது.

இந்தச் சங்கத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருந்தது. இந்தச் சங்கத்தில் ஜமீன்தார்களும், சித்பவன் பார்ப்பனர்களும், நிலபிரபுக்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும். இதற்கு முன்பு 1851ம் ஆண்டு பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியிலும் இதுபோன்ற ஒரு சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

1876ம் ஆண்டு சுரேந்திரநாத் பானர்ஜி தொடங்கிய சங்கத்தின் தொடர்ச்சியாகத்தான் 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு பிரிட்டிஷ் ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் சென்ற பிறகு, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய புதிதில் பிரிட்டிஷ் அரசை இது எதிர்க்கவில்லை. கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் பெரும் பங்கை வாங்கி தருவது, ஜமீன்தார்களின் குறைகள், உயர்ஜாதியினரின் பிரச்சனைகள் குறித்து அரசிடம் பேசித் தீர்ப்பதே இந்த கட்சியின் நோக்கமாக இருந்தது.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர்களுடன், உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி ஆகிய இந்தியர்களும் சேர்ந்து தொடங்கியதுதான் இந்தக் கட்சி. கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முதல் கூட்டத்தில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

மக்கள் பிரச்சினைகளை பிரிட்டிஷ் நிர்வாக்ததுக்கு கொண்டு செல்லும் கட்சியாக இருந்த காங்கிரஸ், பின்னர் விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே 2 குழுக்கள் உருவாகின. கோஷ்டிகள் உருவான பிறகே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.


பிரிட்டிஷ் அரசாங்கத்தை அனுசரித்து நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அடிப்படை உரிமைகளை பெறலாம் என்பது ஒரு குழுவின் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்புக் கொடுக்காமல் அவர்களை உடனே நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பது இன்னொரு குழுவின் நோக்கமாக இருந்தது. இவர்கள் தீவிரவாதிகளாக கருதப்பட்டார்கள். இவர்களுக்கு திலகர் தலைவரானார்.

இதையடுத்து காங்கிரஸ் பிளவுபடும் நிலைக்கு சென்றது. ஆனால், அன்னிபெசண்ட் உள்ளிட்ட சில தலைவர்கள் இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி காங்கிரஸ் பிளவுபடுவதை தடுத்தனர். அதன்பிறகு, இந்த இரு கருத்து உள்ளவர்களுமே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டு இந்தியா முழுக்க லட்சக்கணக்கான ஆதரவாளர்களை இயக்கத்திற்குள் இழுத்துவர காரணமாக இருந்தனர்.

இந்நிலையில்தான் காந்தி 1915ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தி வெற்றிபெற்றதால் இந்தியாவில் பரவலாக அறிமுகமாகியிருந்தார். அவரை கோபால கிருஷ்ண கோகலே இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.



முன்னதாக இந்தியா முழுவதும் அவர் பயணம் செய்து மக்களுடைய வாழ்க்கை முறைகளையும், கலாச்சார வேறுபாடுகளையும் கண்டறிந்தார். பின்னர்தான் இந்திய விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தொடக்கத்தில் ஆங்கிலேயருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதனமாக மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சியை 30 ஆண்டுகள் கழித்து மக்களுடைய இயக்கமாக மாற்றினார் காந்தி. சத்தியாக்கிரக போராட்ட முறையை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பயன்படுத்தினார். இது இந்தியர்களை பெரிதும் கவர்ந்தது.

அறவழிப்பாதையை காந்தி ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயரை ஆதரித்தார். 1917 ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார் தலைமை ஏற்றார். அவர் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வேண்டி கிலாபத் இயக்கத்தையும் ஆதரித்தார்.

டிசம்பர் 1924 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஒரு ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாகவே காந்தி மக்கள் தலைவராக அறிமுகமாகிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி ஒரு ஆண்டுதான் பதவிவகித்தார். ஆனால், விடுதலைப் போராட்டத்தின் மையப்புள்ளியாகவும், காங்கிரஸ் கட்சியை இயக்கும் சக்தியாகவும் அவரே இருந்தார். 

(நீதிக்கட்சியின் தோற்றத்தையும் பார்ப்பனர் அடைந்த பதற்றத்தையும் திங்கள் கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்


சார்ந்த செய்திகள்