அம்பேத்கர் மீது நிஜமாகவே பாஜகவுக்கு அக்கறையா?
குஜராத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் மக்களை அடித்தே கொன்ற பாஜகவுக்கு, நாக்பூரில் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைவதை தடுத்த பாஜகவுக்கு அம்பேத்கர் மீது நிஜமாகவே அக்கறை இருக்க முடியுமா?

எல்லாமே தேர்தல் படுத்தும்பாடு. குஜராத்தில் தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டேல் வகுப்பினரும் பாஜவின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்கள். பாஜக குஜராத்தில் தோல்வியின் விளிம்பை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அம்பேத்கரை தூக்கிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மோடி தள்ளப்பட்டிருக்கிறார். டெல்லியில் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஜன்பத் சாலையில் அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் திறந்து வைத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, டெல்லி, மும்பை, நாக்பூர், எம்ஹவ், லண்டன் ஆகிய அம்பேத்கர் தொடர்புடைய ஐந்து இடங்களை புனித ஸ்தலங்களாக மோடி அறிவித்திருக்கிறார்.
நாக்பூரில் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைவதை பாஜகவினர் தடுத்ததால்தான் சென்னையில் அவருடைய பெயரில் சட்டப்பல்கலைக் கழகத்தை கலைஞர் அமைத்தார். தலித் மக்களை ஏமாற்ற திட்டமிடும் பாஜக, அதில் நிச்சயமாக வெற்றிபெறப் போவதில்லை.

ஒரு மத்திய அமைச்சர், அதிலும் ராணுவ அமைச்சர், தமிழகத்தில் மீனவ மக்களிடம் ஒருமையில் மரியாதையாக பேசியதை ஊரே, நாடே பார்த்து காறி உமிழ்ந்தது. நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர்சாதியினர்தான் பாஜகவின் தலித் ஆதரவு மனநிலையின் ஆதாரங்கள் என்று மக்களுக்கு தெரியும்.
தலித் மக்கள் என்றால் பாஜகவுக்கு எப்போதுமே கிள்ளுக்கீரைதான் என்பதை தலித் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மோடியின் அம்பேத்கர் ஆதரவு நாடகம் அவர்களிடம் எடுபடாது என்பதே உண்மை.
- ஆதனூர் சோழன்